பொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்! Posted on 22-Feb-2017
தருமபுரி
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி. தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்தினருடன் கோரிக்கை மனு அளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக வாளாகத்தில் திடீரென பழனிசாமி குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்கள் பகுதியில் உள்ள பொது வழிப்பாதையில் 34 அடியை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி பொது வழிப்பாதையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக அந்த பகுதியில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.