OUR CLIENTS
புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ்
புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ் Posted on 23-Feb-2017 புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ்

புதுதில்லி
புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை. ரூ.500 மற்றும் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் தயாரிப்பு மற்றும் புழக்கத்தை அதிகரிப்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.
போதுமான அளவில் பணம் உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம்களில் மாற்றங்கள் செய்வதில் உள்ள பிரச்னைகளுக்கு துரிதமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற புகார்களின் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். பொதுமக்கள், தங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டுமே பணத்தை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக பணம் எடுத்தால், மற்றவர்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை அடைந்துவிட்டதாகவும், பண விநியோகத்தை தினசரி அடிப்படையில் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Label