OUR CLIENTS
இன்று மகா சிவராத்திரி - பாவங்கள் நீங்க சிவ தரிசனம் செய்வோம்
இன்று மகா சிவராத்திரி - பாவங்கள் நீங்க சிவ தரிசனம் செய்வோம் Posted on 24-Feb-2017 இன்று மகா சிவராத்திரி - பாவங்கள் நீங்க சிவ தரிசனம் செய்வோம்

சென்னை
மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயயங்களுக்கு சென்று வாங்கி கொடுத்து வருகின்றன. இன்று சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு மணிக்கு முன்னும் பின்னும் குறைந்த பட்சம் ஒரு நாழிகை (24 நிமிடம்) சதுர்த்தசி திதி இருக்கும் நாள் மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களில் நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.

ஏகாதசி போல் மிகவும் உத்தமமான விரதம் சிவராத்திரி விரதம் ஆகும். இன்றைய நாள் இரவு முழுவதும் சதுர்த்தசி திதி நடப்பில் இருப்பது சிறப்பு. இன்று இரவு அமாவாசை கலப்பு இருந்தால் அதை குஹூ தோஷம் என்பர். திரயோதசி கலப்பு இருப்பது சிறந்தது. மேலும் சதுர்தசியுடன் திருவோணம் நட்சத்திரம் சேருவது மிகவும் சிறப்பு.

சிவராத்திரி முகூர்த்தம்:
இந்த வருடம் திருக்கணித பஞ்சாங்கப்படி திரியோதசி திதி இரவு சுமார் 09-39 மணி வரை இருக்கிறது சதுர்த்தசி திதி வெள்ளி இரவு 12-00 மணிக்கு இருப்பதால் வெள்ளிக் கிழமை இரவு சனிக் கிழமை காலை மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தின நாள் சிவராத்திரி என சிவன் கோயில்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

பாபங்கள் விலகும்:
மஹா சிவராத்திரி விரதம் வருடந்தோறும் அனுஷ்டிப்பவர்களுக்கு எல்லா பாபங்களும் விலகும். ஆயிரம் அஸ்வமேத யாகம் மற்றும் ஆயிரம் ஆண்டுகள் காசியில் வாசம் செய்த புண்ணியம் கிடைக்கும். பாவம் செய்யாத மனிதர் என்று உலகில் யாரும் இல்லை. அறிந்தோ, அறியாமலோ அனுதினமும் பாவக்கணக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறோம்.

புண்ணியம் எது?
எறும்பு, ஈ, கொசு தூசு துரும்பு என எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். அவற்றிற்கு நாம் அறியாமலேயே துன்பம் கொடுக்கும்போது, நம் பாவக்கணக்கும் சேர்ந்துவிடுகிறது. அவற்றைக் களைய இறைவன் நமக்கு பல வாய்ப்புகளையும் அளித்திருக்கிறார்.

உயிரினங்களுக்கு நன்மை:
புண்ணிய ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை, புனித நீராடல், மகாமகம் நீராடல், கங்கோத்திரி, யமுனோத்ரி போன்ற தீர்த்த யாத்திரைகள் எல்லாம் அதற்கு உதவுவனதான். அதற்காக உயிரினங்களை துன்புறுத்திவிட்டு புனித நீராடலில் ஈடுபட்டால் பாவம் கழிந்துவிடும் என்று அர்த்தம் இல்லை. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் உயிர்வாழ உரிமை உண்டு என்ற புரிதலே அவசியம். இனியாவது பாவங்கள் செய்யக் கூடாது என்று சங்கல்பம் எடுப்பதும் முக்கியம். அப்படி, பாவக்கணக்குகளை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளும் அற்புதமான நாள்தான் சிவராத்திரி.

சிவராத்திரியின் சிறப்புகள்:
சிவராத்திரிக்கும் மற்ற விழாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டு. இறைவனின் அவதாரங்களை மையப்படுத்தி கிருஷ்ண ஜயந்தி, ராமநவமி, அனுமன் ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, சங்கரர் ஜயந்தி என விழாக்கள் உள்ளன. ஆனால், சிவபெருமான் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற் பட்டவர் என்பதால், அவருக்கு ஜயந்தி என்பது கிடையாது.

மகத்துவம் மிகுந்த நாள்:
மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசிதான் சிவராத்திரி. அனைத்துக்கும் ஆதாரமான சிவன், உயிர்களைப் படைத்ததும், ஒடுக்கியதும் (தனக்குள் ஐக்கியப் படுத்தியது) இந்த நாளில்தான். ‘லயக்ரம ஸ்ருஷ்டி தினம்' என்கின்றன சாஸ்திரங்கள். ‘லயம்' என்றால் ‘ஒடுக்குதல்', ‘ஸ்ருஷ்டி' என்றால் ‘படைத்தல்'. அதாவது, படைத்தலுக் கும், அழித்தலுக்கும் ஆதாரமான இறைவனுக்கான விழா இது. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான். அந்த நாளின், மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டு விலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.

பஞ்சமா பாவங்கள் நீங்கும்:
அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு
எல்லை யில்லதோர் அடிமை பூண் டேனுக்கே.
- அப்பர் சுவாமிகள்

பஞ்சமா பாவங்கள் எனச் சொல்லப்படும் ஐந்து விதமான பாவங்கள் கூட அச்சமயத்தில் மன்னிக்கப்படுமாம். அதாவது கொலை, கொள்ளை, பலாத்காரம், பொய் பேசுதல், ஏமாற்றுதல் ஆகிய பாவங்கள் மன்னிக்கப்படுமாம். எனவேதான், அந்நாளில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழ நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர். அது, நிறைந்த புண்ணியத்தையும் நமக்குத் தரும். மூன்றாம் காலம் (நள்ளிரவு) என்பது தீட்டுக்களைக் கூட விலக்கி வைக்கும் நேரம். எனவேதான், சிவபூஜையில் பயன்படுத்தாத ‘தாழம்பூ' அந்த ஒரு தருணத்தில் மட்டும் பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சிவனை சரணடைவோம்:
பூலோக உயிர்கள் மட்டுமின்றி தேவர்கள், கிங்கரர்கள், பூதகணங்கள் சுவாமியை ஆராதிக்கும் தினமும் அதுதான் என்பது ஐதீகம்.மேலும் இந்த தினம் குற்றங்களைப் போக்கும் தினம் என்பதால், சிவனைச் சரணடைந்து, அடுத்த பிறப்பு என ஒன்று வேண்டாம். இந்தப் பிறப்போடு மோட்சகதி பெற வேண்டும் என்கிற வேண்டுதலை முன்வைத்து வணங்க வேண்டும்.

சிவ ஆலயம் செய்வோம்:
இன்று முழு இரவும் கண் விழித்திருந்து, சிவனாரை மனதில் தியானிக்க வேண்டும். தேவாரம், திருவாசகப் பதிகங்களை பாராயணம் செய்து அவரை வழிபட வேண்டும். மறுநாள் காலையிலும் கண் விழித்திருந்து, மாலை ஏழு மணிக்கு மேல் உறங்கச் செல்லலாம். முடியாதவர்கள், மதிய உணவுக்குப் பிறகு உறங்கிக் கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது. சிவனருளைப் பெற ஆண்டிற்கு ஒருநாள் வரும் மஹாசிவராத்திரியன்று சிவபெருமானை மனதில் நினைத்துத் தொழுவோம். தீராத பாவங்களும் பிணிகளும் தீர்ந்து, அவரின் பரிபூரண அருள் பெற்று வாழ்வில் உய்வோம்.

Label