OUR CLIENTS
குற்றவாளி ஜெ. பெயரில் திட்டத்தை தொடங்குவதா? எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!
குற்றவாளி ஜெ. பெயரில் திட்டத்தை தொடங்குவதா? எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்! Posted on 25-Feb-2017 குற்றவாளி ஜெ. பெயரில் திட்டத்தை தொடங்குவதா? எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதா பெயரில் திட்டங்களை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் தாங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் மனு அளித்தனர். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் ஸ்டாலின் சந்தித்து பேசினர்.

டெல்லி பயணத்தை முடித்துவிட்டு ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

ஜெ. பெயரில் திட்டம்:
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என ஒரு பெரிய விழா நடந்திருக்கிறது. அந்த விழாவை தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்.

வெட்கக் கேடு:
ஜெயலலிதா பற்றி நான் குறை சொல்வதாக யாரும் கருதக்கூடாது, அது அரசியல் நாகரிகமும் இல்லை. அதை நாங்கள் சொல்லவும் மாட்டோம். ஆனால் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஜெயலலிதா பெயரில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு, வேதனை எதுவும் கிடையாது.

இது நியாயம்தானா?
அதுமட்டுமல்ல, ஒரு நியாயமான, நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்று உள்ள அரசு அதிகாரியான இன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இதுவரையில் நாங்கள் அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறோம், எல்லாரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் இன்று நடைபெற்ற விழாவிற்கு, அரசுக்கு மக்கள் தரக்கூடிய வரிப்பணத்தை எடுத்து பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்திருப்பது எந்தவகையில் நியாயம் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

வெட்கப்பட வேண்டியது...
அதுமட்டுமல்ல, ஒரு நேர்மையான அதிகாரியாக மற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர் தலைமைச் செயலாளராக இருக்க வேண்டியவர். அப்படிப்பட்ட தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள கிரிஜா வைத்தியநாதன், இன்றைக்கு இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், உள்ளபடியே வெட்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

ஆளுநரின் பதில் என்ன?
மேலும், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த நேரத்தில், முதலமைச்சராக, அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கக்கூடியவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உள்ள விதிகளை நாங்கள் மீறமாட்டோம், அதனடிப்படையில் ஒழுங்குடன் நடப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் பதவி பிரமாணம் செய்கிறார்கள். அப்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர்கள், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டனை பெற்று இருக்கக்கூடியவரின் பெயரை பயன்படுத்தி, அவருடைய பிறந்த நாளுக்காக அரசு விழா நடத்தி, அந்த விழாக்களில் அவர்கள் எல்லாம் பங்கேற்கிறார்கள் என்று சொன்னால், இதற்கெல்லாம், தமிழக பொறுப்பு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டு இருப்பவர், பொறுப்பாக எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

சிறை கைதிக்காக இனிப்பு:
எப்போதுமே தலைவர்களின் பிறந்த நாள் வருகிறது என்றால் சிறையில் இருக்கக்கூடியவர்களுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம். அதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சிறை தண்டனை பெற்ற ஒருவருடைய பிறந்த நாளுக்கு இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கையானது. தமிழக அரசின் நிலை இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறது என்பதை நான் மிகுந்த வேதனையுடனும், வருத்தத்துடனும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஜெ. பெயரில் அரசு விழாவுக்கு முடிவு:
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றன. இன்றைக்கு குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரில் அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு எல்லாம் விரைவில் முடிவு வரும். அந்த முடிவு வரக்கூடிய சூழ்நிலையை திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்..

Label