OUR CLIENTS
ராணுவ ஆள்தேர்வு வினாத்தாள் கசிவு: 18 பேர் கைது; 6 மையங்களில் தேர்வு ரத்து
ராணுவ ஆள்தேர்வு வினாத்தாள் கசிவு: 18 பேர் கைது; 6 மையங்களில் தேர்வு ரத்து Posted on 27-Feb-2017 ராணுவ ஆள்தேர்வு வினாத்தாள் கசிவு: 18 பேர் கைது; 6 மையங்களில் தேர்வு ரத்து

மகாராஷ்டிரா
ராணுவ ஆள்தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததைத் தொடர்ந்து, தாணே நகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தி, மகாராஷ்டிரம் மற்றும் கோவாவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 18 பேரைக் கைது செய்துள்ளனர். 6 மையங்களில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ராணுவத்தில் படைவீரர் உள்ளிட்ட பணிகளில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வை ராணுவ ஆள்தேர்வு வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நாடு முழுவதும் 52 மையங்களில் பிப். 26 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முன்கூட்டியே கசிந்தன. அவ்வாறு கசிந்த வினாத்தாள்களை வைத்துக் கொண்டு மாணவர்கள் பலஇடங்களில் விடை எழுதி வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து தாணே குற்றப்பிரிவு போலீசார் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து மகாராஷ்டிரத்தின் பல்வேறு நகரங்களிலும், கோவாவிலும் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர், துணைராணுவப் படை வீரர் உள்பட 18 பேரைக் கைது செய்தனர்.

அவர்களைத் தவிர, மகாராஷ்டிரம் மற்றும் கோவாவில் இந்த வினாத்தாள் கசிவால் பயனடைந்ததாக சந்தேகிக்கப்படும் 350 மாணவர்களையும் பிடித்துச் சென்று காவலில் வைத்துள்ளனர்.

இத்தகவலை, தாணே குற்றப்பிரிவு காவல்துறையின் பிரிவு-1இன் மூத்த ஆய்வாளர் நிதீன் தாக்கரே தெரிவித்தார். இந்த வினாத்தாள்களை அந்த மாணவர்களுக்கு பயிற்சி நிலையங்களை நடத்தும் சிலரும், ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் அளித்ததாகவும், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து விடைகளை எழுதித் தருமாறு மாணவர்களிடம் கூறப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவ்வாறு தங்களிடம் வினாத்தாளின் நகலை வழங்கியவர்களுக்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சத்தை அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வினாத்தாள் யார் மூலமாகக் கசிந்தது என்பதைக் கண்டறியும் பணியில் இறங்கியுள்ள போலீசார், இவ்விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் கசிவு தொடர்பாக ராணுவமும் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

6 மையங்களில் தேர்வு ரத்து: ராணுவ ஆள்தேர்வு எழுத்துத்தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள 6 மையங்களில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நாகபுரி, காம்டி, அகமதுநகர், ஆமதாபாத், கோவா மற்றும் கிர்கி ஆகியவையே அந்த மையங்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Label