OUR CLIENTS
ஈரான் கடற்படை போர்ப் பயிற்சி: அமெரிக்கா கவலை
ஈரான் கடற்படை போர்ப் பயிற்சி: அமெரிக்கா கவலை Posted on 27-Feb-2017 ஈரான் கடற்படை போர்ப் பயிற்சி: அமெரிக்கா கவலை

வாஷிங்டன்
ஈரான் எல்லையையொட்டிய கடற் பகுதியில் அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள் போர்ப் பயிற்சியைத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹபீபுல்லா சய்யாரியை மேற்கோள் காட்டி அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டது.

ஹோர்முஸ் ஜலசந்தியையொட்டிய இந்திய பெருங்கடல், ஓமான் கடல் அடங்கிய 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பில் போர்ப் பயிற்சி நடைபெறுகிறது என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.

இந்தப் போர்ப் பயிற்சியில் ஈரான் புரட்சி பாதுகாப்புப் படைப் பிரிவு கலந்து கொள்ளவில்லை. அந்தப் படைப் பிரிவினர் அவ்வப்போது அமெரிக்க வணிக கப்பல்களுக்குத் தொல்லை கொடுத்து வருவதாக அமெரிக்க அரசு புகார் கூறி வருகிறது. உலகின் மொத்த எண்ணெய் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதி வழியாகக் கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, ஈரான் கடற்படையினர் மேற்கொள்ளும் முதல் போர்ப் பயிற்சி இதுவாகும். முன்னதாக, ஈரான் ராணுவத்தினர் ஏவுகணைகளைப் பயன்படுத்தி போர்ப் பயிற்சியைக் கடந்த வாரம் தொடங்கினர்.
அந்த நாட்டு பாதுகாப்புப் படைகளின் போர்ப் பயிற்சி நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும், அதிகாரபூர்வமாக அமெரிக்க அரசு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

பஹ்ரைனில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படையின் 5-ஆவது படைப் பிரிவுத் தலைமையும் ஈரான் கடற்படையின் போர்ப் பயிற்சி குறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. பஹ்ரைனில் உள்ள சர்வதேச செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க கடற்படையின் 5-ஆவது படைப் பிரிவுத் தலைமையகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

ஒபாமா ஆட்சிக் காலத்தில், வல்லரசு நாடுகளுடன் அணு ஆராய்ச்சி தொடர்பான உடன்படிக்கையை ஈரான் 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. அதன்படி, ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கு மட்டும் அணு ஆராய்ச்சியில் ஈடுபடலாம்.

ஆனாலும், ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் அச்சுறுத்தல் தொடர்வதாகவும் சர்வதேச உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இந்த நிலையில், தனது வருடாந்தர போர்ப் பயிற்சிகளை ஈரான் பாதுகாப்புப் படையினர் தொடங்கியுள்ளனர்.

Label