ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெ. மரணத்தில் சந்தேகம் எழவில்லையா? செங்கோட்டையன்! Posted on 28-Feb-2017
ஈரோடு
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து ஏன் சந்தேகம் எழவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஏன் அவரது படத்தை வெளியிடவில்லை என பலர் கேட்கிறார்கள். 1984-இல் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருடைய படத்தை வெளியிட்டிருந்தார்கள்.
உடல் நலம் தேறி வந்த பின் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அந்தப் படத்தை ஏன் வெளியிட்டீர்கள் என எங்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். கேட்டார். கட்சித் தலைவர்கள் சிகிச்சை பெறும்போது எந்தப் படத்தையும் வெளியிட விரும்ப மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது எந்தவிதமான தவறும் நடக்கவில்லை.
அதிமுகவிற்காக பன்னீர்செல்வம் எந்த தியாகத்தையும் செய்யவில்லை. குளுகுளுவென்ற கார்கள், பின்னாலே, முன்னாலே பவனிவரும் கார்கள் மத்தியில் டெல்லிக்கு செல்வது இதையெல்லாம் பார்த்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதா பற்றி அவருக்கு கவலையில்லை. இன்றைக்கு சொல்கிறாரே, நான் கேட்கிறேன், 60 நாட்கள் முதல்வராக இருந்தாரே பன்னீர்செல்வம், அப்போது தெரியவில்லையா ஜெயலலிதாவின் இறப்பு பற்றி' இவ்வாறு பேசினார்.