OUR CLIENTS
சட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் Posted on 01-Mar-2017 சட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை
சட்டப்பேரவைத் தேர்தலை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளும் வகையில் தயாராகுமாறு மாவட்டச் செயலாளர்களை, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமை வகித்தனர்.

முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவராகப் பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், மக்கள் திமுகவின் பக்கம்தான் உள்ளனர்; திமுகவுக்கு வாக்களிக்காத வருத்தம் அவர்களுக்கு உள்ளது. இப்போது தேர்தல் நடைபெற்றால் நாம்தான் வெற்றி பெறுவோம் என்றனர்.

இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுக அரசுக்கு இல்லை. ஒருவேளை, இந்தத் தேர்தல் நடைபெற்றால், அனைத்து மாநகராட்சிகளையும் திமுகதான் கைப்பற்ற வேண்டும். 100 சதவீதம் இல்லாவிட்டாலும், 75 சதவீத உள்ளாட்சி இடங்களையாவது நாம் கைப்பற்ற வேண்டும். காங்கிரஸுடனான கூட்டணி தொடரும்; அதில் மாற்றம் எதுவும் இல்லை.

1971 -ஆம் ஆண்டு தேர்தலைப் போல்: அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தயாராகுங்கள். இப்போது தேர்தல் நடைபெற்றால்கூட, 1971 சட்டப்பேரவைத் தேர்தல் போல மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிப்போம். அதிமுக ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் திமுக தோல்வியை சந்தித்ததோ, அந்த இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில், மறைந்த மாவட்டச் செயலாளர் கே.பி.கே.தங்கவேலுவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவில் ராதாரவி: இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் ராதாரவி திமுகவில் இணைந்தார்.

Label