OUR CLIENTS
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் போராட்டம்
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் போராட்டம் Posted on 14-Mar-2017 தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் போராட்டம்

சென்னை, மார்ச் 14-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளின் முன் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 33,222 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இக்கடைகளின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்பட லட்சக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு: கைது செய்யப்பட்டு சமுதாயக் கூடங்களில் வைக்கப்பட்டிருந்த திமுக நிர்வாகிகளை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

கனிமொழி கைது: அரிசி, துவரம்பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததைக் கண்டித்து நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்காததால், அதை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயப்பேட்டை சாலையில் உள்ள நகர கூட்டுறவு சங்க வாயிலில் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கனிமொழி பேசியது: அதிமுக ஆட்சியில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். ஆனால், டாஸ்மாக் கடைகள் மட்டும் கண்ணும் கருத்துமாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் இணையதளத்தில் மதுவகைகள் என்னென்ன கிடைக்கும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆட்சியை எப்படித் தக்க வைக்கலாம் என்பதிலேயேதான் தற்போதையை அரசு கவனம் செலுத்தி வருகிறது. தங்களிடம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சென்று விடுவார்களோ என்ற பயத்திலேயே உள்ளனர். மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை என்றார்.

பின்னர் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுக நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெ.அன்பழகன் தலைமையில்...: சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசலம் தெரு மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள நியாயவிலைக் கடை முன் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையிலும், மண்ணடி மூர் தெரு பகுதியில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

வில்லிவாக்கம் தெற்கு மாட வீதியில் உள்ள உணவுப் பங்கீட்டு அலுவலகம் முன் சட்டப்பேரவை உறுப்பினர் ப.ரங்கநாதன் தலைமையிலும், சைதாப்பேட்டை ஆலந்தூர் ஐந்து விளக்கு அருகே உள்ள நியாயவிலைக் கடை முன் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் மட்டும்...: சென்னையில் மட்டும் 401 இடங்களில் நியாய விலைக் கடைகள் முன் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் 12 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் தொடரும்
அதிமுக அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சென்னை மண்ணடி மற்றும் லாயிட்ஸ் சாலை ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த திமுகவினரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களைக் கைது செய்துள்ள அரசின் ஆணவப் போக்கைக் கண்டிக்கிறேன்.

நியாயவிலைக் கடைகளில் கடந்த மூன்று, நான்கு மாதங்களாக பாமாயில், பருப்பு வகைகள் இல்லை. போதுமான அளவு அரிசியும், சர்க்கரையும் விநியோகிக்கப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் போராட்டம் நடைபெற்றது. நியாயவிலைக் கடையிலிருந்து தலைமைச் செயலகம் வரை செயல்பட முடியாத ஓர் ஆட்சி நடைபெறுகிறது.

இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக சார்பில் விரைவில் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

குடிநீர்த் தட்டுப்பாடு வரக்கூடிய வகையில் பிரச்னை உருவாகியுள்ளது. அதையும் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு வியூகத்தை அமைத்துப் போராட்டம் நடத்துவோம்.

Label