OUR CLIENTS
எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி Posted on 15-Mar-2017 எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம், மார்ச் 15-
எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி 28,669 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

சேலம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.320 கோடியில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 140 ஆண்டு காலத்தில் இல்லாத வறட்சி நிலவுகிறது. குடிநீர் பிரச்னையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நகர மற்றும் புறநகர் பகுதியில் போதிய நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையைத் தவிர்க்க போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குடிமராமத்து திட்டத்தில் 1519 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  இத்திட்டம் ரூ.300 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை மேலும் வளர வேண்டும் என்பதற்காக உழைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நாட்டு மக்களுக்காக தன்னை தியாகம் செய்தவர்.

அவர் நம்மை விட்டு மறைந்த சூழ்நிலையில் கட்சியில் தற்போது சிலர் திமுக கைக்கூலிகளாக மாறி கட்சியை அழிக்க வேண்டும் என்றும், ஆட்சியைக்  கவிழ்க்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டனர். ஆனால், அது நடக்கவில்லை. ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்களை மன்னிக்கக் கூடாது.

தமிழக முதல்வராக இருக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது என எதிரணியில் உள்ள செம்மலை கேட்கிறார். நான் அவரை போல நிறம் மாறும் பச்சோந்தி அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி என கூறுவதற்கு அவருக்கு என்ன தகுதி உள்ளது?
1987 இல் தான் கட்சிக்கு வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் முன்னதாக ஜானகி அணிக்கு தான் விசுவாசமாகச் செயல்பட்டார். எனவே, செம்மலை, ஓ.பன்னீர்செல்வத்தைவிட உழைப்பிற்கும், விசுவாசத்திற்கும் நானே உதாரணம்.

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டனர். ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்தது.

எதிர்க்கட்சி தலைவர் பினாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என விமர்சிக்கிறார். அவர் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைக்கலாம் என முயற்சிக்கிறார். அது வெறும் பகல் கனவாகத் தான் இருக்கும். எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த ஆட்சி வெற்றி பெறும்.

இந்த ஆட்சி தொடரக் கூடாது என நடிகர் கமல் பேசி வருகிறார். அவருக்கு விஸ்வரூபம் திரைப்படத்தில் வந்த போது உதவியவர் ஜெயலலிதா. அந்த நன்றியை மறந்து பேசி வருகிறார். மேலும் வேண்டுமென்றே திட்டமிட்டு ஆட்சிக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார் என்றார்.

Label