OUR CLIENTS
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ் Posted on 15-Mar-2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்

திருவண்ணாமலை, மார்ச் 15-
நியாயமான முறையில் தேர்தல் நடைபெறாது என்பதால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை தெற்கு, மேற்கு மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.காளிதாஸ் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சதாசிவம் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் நாரையூர் ப.குமரேசன் வரவேற்றார். புதிய மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தால் மட்டுமே இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை. வழக்கம்போல இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது. எனவேதான், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார் ராமதாஸ்.

பேட்டியின்போது, பாமக முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Label