OUR CLIENTS
நாடு முழுவதும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு புழக்கம்... ரூ.66 லட்சம் பறிமுதல்!
நாடு முழுவதும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு புழக்கம்... ரூ.66 லட்சம் பறிமுதல்! Posted on 15-Mar-2017 நாடு முழுவதும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு புழக்கம்... ரூ.66 லட்சம் பறிமுதல்!

புதுதில்லி, மார்ச் 15-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ரூபாய் நோட்டு இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே இதைபோல கள்ளநோட்டு அச்சடிக்க முடியாது எனவும் கூறப்பட்டது. ஆனால் அதையும் மீறி 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்த வண்ணம் உள்ளன.

இது சம்மந்தமாக பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் கூறியதாவது:-
2 ஆயிரம் ரூபாய் நோட்டு மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் நடமாட்டம் இருப்பது பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டதற்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கள்ள நோட்டாக தயாரித்து பரவவிட்டு இருக்கிறார்கள்.

இந்த பணத்தை பெரும்பாலும் நமது அண்டை நாடுகளில் இருந்து அச்சடித்து இந்தியாவுக்குள் அனுப்பி இருக்கிறார்கள். இதுவரை ரூ.66 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குஜராத்தில் மட்டும் ரூ.26 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. டெல்லியில் ரூ.25 லட்சம் நோட்டுகள் சிக்கி உள்ளன. அதேபோல கர்நாடகாவிலும் கள்ளநோட்டு சிக்கி இருக்கிறது.

இந்த நோட்டுகள் அனைத்துமே 2 ஆயிரம் ரூபாயை ஸ்கேன் செய்து பின்னர் அதை அப்படியே அச்சடித்து இருக்கிறார்கள். கள்ளநோட்டுகள் ஊடுருவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வங்காளதேச எல்லை வழியாகவும் கள்ள நோட்டுகள் ஊடுருவச் செய்கின்றனர். அவற்றை தடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் கூறினார்.

Label