ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது Posted on 16-Mar-2017
சென்னை, மார்ச் 16-
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்து இருப்பதன் மூலம், அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இந்த நிலையில், சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக, கோவை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், கட்சியின் ஆட்சி மன்றக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு நூறு சதவீதம் பிரகாசமாக உள்ளது. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டதில் கட்சியினர் யாருக்கும் அதிருப்தி இல்லை என்றார்.