OUR CLIENTS
பேருந்துக் கட்டணம் உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
பேருந்துக் கட்டணம் உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted on 16-Mar-2017 பேருந்துக் கட்டணம் உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, மார்ச் 16-
பேருந்துக் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே டீசலுக்கும் பெட்ரோலுக்கும் மதிப்புக்கூட்டு வரியை அதிகரித்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் மறைமுகக் கட்டண உயர்வைப் புகுத்தியுள்ளது தமிழக அரசு.

அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கொண்டு வரப்பட்டுள்ள திரைமறைவு கட்டண உயர்வு சாமானிய மக்களைத் திடுக்கிட வைத்துள்ளது. கட்டண உயர்வு என்று நேரடியாக அறிக்காமல், ஏற்கனவே இருக்கிற சாதாரணப் பேருந்துகளை விரைவுக் கட்டணப் பேருந்துகளாக மாற்றி மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் 3,689 மாநகர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சாதாரணக் கட்டணத்தில் இதுவரை இயக்கப்பட்டு வந்த 1230 பேருந்துகளில், 766 பேருந்துகள் விரைவுக் கட்டணப் பேருந்துகளாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால் முதல் கட்டண நிலையில் ரூ.3-ஆக இருந்த கட்டணம் ரூ.5-ஆக விரைவுக் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரணக் கட்டணத்துக்கும், விரைவுக் கட்டணத்துக்கும் இடையிலான உயர்வு ரூ.7 வரை அதிகமாக உள்ளது. சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விரைவுப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகும் சூழலில், மக்கள் விரைவுப் பேருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபுறமிருக்க, மாநில அரசே தனியாக பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது கொடுமையானது. எனவே, விரைவுப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ள பேருந்துகளை உடனடியாக சாதாரணப் பேருந்துகளாக மாற்ற வேண்டும். மேலும் பேருந்துக் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்.

கட்டண உயர்வைக் கைவிடவில்லை என்றால், திமுக சார்பில் விரைவில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும்.

Label