OUR CLIENTS
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Posted on 18-Mar-2017 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மார்ச் 18-
பிரதமர் நரேந்திரமோடிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில், கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை கோரி தொடர்ச்சியாக பணியாற்றுவதிலே தி.மு.க. முன்னணியில் நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், பெண் விடுதலைக்காக உளப்பூர்வமாக தி.மு.க. தொடர்ச்சியாக போராடி வருகிறது. பெண்களின் உரிமைகளே மனித உரிமைகள் என்பதை தி.மு.க. நேர்மையுடனும், தீவிரமாகவும் கருதி வருகின்ற காரணத்தாலேயே தமிழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்காகவும், நன்மதிப்புக்காகவும் சட்டங்களை கொண்டுவந்தது.

இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989–ன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீடு அளித்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு தந்தது மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுத்தந்தது உள்ளிட்டவை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டமாக்கி நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான பெண்கள் நலன் சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கைகள்.

மகளிர் இடஒதுக்கீட்டின் வரலாறானது 1996–ம் ஆண்டு ஆரம்பமாகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளுக்கு பின்னும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறவில்லை. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக சமத்துவத்தின் மீது அக்கறை கொண்டவரான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 26–6–1998 மற்றும் 22–11–1999 ஆகிய தினங்களில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், சில காரணங்களால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது.

மகளிர் முன்னேற்றத்திற்கான பணிகள் மற்றும் சமூகநீதி இயக்கத்திற்கான எங்கள் தலைவர் கருணாநிதியும் பல்வேறு மகளிர் மாநாடுகளில் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்றிட தீர்மானங்களை கொண்டு வந்ததோடு, 24–11–2014 அன்று வாஜ்பாய் மகளிர் இடஒதுக்கீட்டிற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் குறிப்பிட்டு, நாட்டில் உள்ள மகளிர் பெருமைப்படுத்தும் விதமாக மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்றிடுமாறு உங்களுக்கு கடிதம் எழுதினார். கனிமொழி எம்.பி.யின் தலைமையில் செயல்படும் தி.மு.க. மகளிர் அணி சார்பில், ‘உலக மகளிர் தினம்–2017’–ஐ முன்னிட்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டிற்கு நான் தலைமையேற்றபோது, சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அரசியலில் பெண்களின் முன்னேற்றத்திற்கான இன்றிமையாத சமூகநீதி மற்றும் பாலின சமத்துவத்தின் பயன்களில் சம வாய்ப்புகளை வழங்கவும், நம் நாட்டின் மதிப்புக்குரிய அரசியல் பதவிகளில் பெண்கள் பங்கேற்க வழிவகை செய்யும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Label