OUR CLIENTS
மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மேல்–சபையில் திருச்சி சிவா தீர்மானம்
மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மேல்–சபையில் திருச்சி சிவா தீர்மானம் Posted on 18-Mar-2017 மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மேல்–சபையில் திருச்சி சிவா தீர்மானம்

புதுதில்லி, மார்ச் 18 -
பாராளுமன்ற மேல்–சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஒரு தனிநபர் தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: மிருகவதை தடுப்பு சட்டம் 1960–ல் காளைகளுக்கு விலக்கு அளித்து திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த சட்டம் காளைகளை அதன் பயன்பாடு மற்றும் பல்வேறு வேலைகளுக்கான பயிற்சி வழங்குவதை தடுக்கிறது. பல ஆண்டுகளாக உள்நாட்டு காளை வகைகள் வேளாண் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன, இப்போதும் இருந்து வருகின்றன.

குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளில் இந்த காளைகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன. செயற்கை கருவூட்டல் முறையினால் உள்நாட்டு காளைகள் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வேளாண் பொருளாதார நாடான இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக பல பழைய பாரம்பரிய விவசாயம் அழிந்துவருகிறது.

கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீர் பாரம்பரியமாக உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன வேளாண் கருவிகள் மற்றும் கவர்ச்சியான கால்நடைகள் இறக்குமதி போன்ற காரணங்களால் உள்நாட்டு காளை வகைகள் படிப்படியாக 
அழிந்துவருகின்றன.

ஜல்லிக்கட்டு போன்ற மாடுபிடி விழாக்கள் உள்நாட்டு காளைகளை பாதுகாப்பதற்கு தான் பயன்படுகின்றன. எனவே உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஆதரவு தரவேண்டும். இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

பா.ஜனதா எம்.பி. இல.கணேசன், உள்நாட்டு காளைகளை பாதுகாக்க தேவையான இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், ஜல்லிக்கட்டு ஒரு நாள் நிகழ்ச்சி தான். எஞ்சிய 364 நாட்களும் அந்த காளைகள் இனவிருத்திக்கு தான் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், இயற்கை முறையிலான விவசாயத்தை ஆதரிப்பதாகவும், இதன்மூலமே விவசாயிகள் அதிக பலன் அடைவார்கள் என்றார். தமிழ்நாடு தான் முதன்முதலாக இயற்கை முறையிலான விவசாயத்தை பெரிய அளவில் செய்துவருகிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. டி.ராஜா பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை பாராட்டுவதாகவும், இது தமிழ்நாட்டின் கலாசார அடையாள சின்னம் என்பதால் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கர்நாடக எம்.பி. ஹரிபிரசாத் (காங்கிரஸ்), ஜல்லிக்கட்டு போல கம்பளா போட்டியை தொடர்ந்து நடத்த இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி. ஆனந்தா பாஸ்கர் உள்பட பலர் தீர்மாத்தை ஆதரித்து பேசினர்.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்துவதற்காகவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. உள்நாட்டு கால்நடைகளை பாதுகாக்க மாநில அரசே தங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் அல்லது சட்டம் கொண்டுவரலாம் என்றும் அவர் கூறினார்.


இதற்கு பதில் அளித்த வேளாண் துறை மந்திரி சுதர்‌ஷன் பகத், உள்நாட்டு கால்நடைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இதுவரை 12 வகையாக பசுக்களை பாதுகாக்க இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

பாராளுமன்ற விவகார துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பேசும்போது, இந்த தீர்மானம் மிகவும் சிறந்த ஒன்று. சிவாவின் ஆலோசனைகள் பயனுள்ளவை. இந்த சட்டத்தை திருத்தும்போது இந்த ஆலோசனைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும். எனவே சிவா தனது தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை ஏற்று திருச்சி சிவா தீர்மானத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.

Label