OUR CLIENTS
மதுவிலக்கு வேண்டி குமரி அனந்தன் நடைபயணம்
மதுவிலக்கு வேண்டி குமரி அனந்தன் நடைபயணம் Posted on 20-Mar-2017 மதுவிலக்கு வேண்டி குமரி அனந்தன் நடைபயணம்

சென்னை, மார்ச் 20-
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தனின் 85-வது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.

தனது 85-வது பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டி நடைபயணம் மேற்கொள்வேன் என்று குமரி அனந்தன் கூறியிருந்தார். அதன்படி காமராஜர் அரங்கில் இருந்து ராஜாஜியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி நோக்கி குமரி அனந்தன் மதுவிலக்கு நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

85-வது பிறந்தநாளை கொண்டாடிய குமரி அனந்தனுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு நாடார் சங்க கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துரமேஷ் நாடார், திருவொற்றியூர் நாடார் உறவின்முறை செயலாளர் எம்.காமாட்சி, சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் குமரி அனந்தன் பேசியதாவது: 85-வது பிறந்தநாள் வாழ்த்துகளால் நான் 25 வயது குமரி போல உற்சாகம் அடைந்திருக்கிறேன். மதுவிலக்குக் காக தொடர்ந்து போராடுவேன். நடைபயணம் செல்வேன். நடக்க முடியவில்லை என்றால் தவழ்ந்து போவேன். அதுவும் முடியவில்லை என்றால் உருண்டு உருண்டு போவேன். அதுவும் முடியவில்லை என்றால் மது விலக்குக்கான முயற்சியில் மாண்டு போவேன். நான் மாண்டு போகவேண்டுமா? என்பதை மத்திய அரசு தீர்மானிக்கட்டும். கொடிய மதுவை ஒழிக்க கொடியெடுத்து கொடுத்தவர்களின் எண்ணம் ஈடேற நடப்பேன். நல்லது நடக்க நடப்பேன். நடந்துகொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து சு.திருநாவுக்கரசர் காந்தி உருவப்படம் பொறித்த கொடியை குமரி அனந்தன் கையில் கொடுத்து மதுவிலக்கு நடைபயணத்தை தொடங்கிவைத்தார். காமராஜர் அரங்கில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, குமரி அனந்தன் நடைபயணத்தை தொடங்கினார்.

விழா நிறைவில், சு.திருநாவுக்கரசரிடம் ‘மக்கள் நலக்கூட்டணியில் ஏற்பட்ட பிளவு’ குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘இது அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்த விவகாரத்தில் நான் கருத்துக்கூற விரும்பவில்லை’, என்று கூறி புறப்பட்டார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி அனந்தனின் தம்பியும், தமிழக காங்கிரஸ் துணைத்தலைவருமான எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Label