OUR CLIENTS
இரட்டை இலையை முடக்க பாரதிய ஜனதா சதி திட்டம்: வைகைச்செல்வன் குற்றச்சாட்டு
இரட்டை இலையை முடக்க பாரதிய ஜனதா சதி திட்டம்: வைகைச்செல்வன் குற்றச்சாட்டு Posted on 21-Mar-2017 இரட்டை இலையை முடக்க பாரதிய ஜனதா சதி திட்டம்: வைகைச்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 21
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விட இப்போது அதிகம் பேசப்படுகிற வி‌ஷயமாக “இரட்டை இலை” சின்னத்தை சிலர் பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கின்றன.

அ.தி.மு.க.வில் மூன்று அணிகள் இருப்பதாக ஒரு மாயையை வலிந்து உருவாக்க நினைக்கும் சிலரது முயற்சி ஏமாற்றத்தில் முடியப் போவது நிச்சயம். முதலில் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ளது தற்காலிகச் சலனம்தானே ஒழிய சிலர் மிகைப்படுத்துவது போல அது பிளவு அல்ல.

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தில், பிளவு என்றால் அது செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நடந்திருந்தால் அதை பிளவு என்று ஏற்றுக்கொள்ளலாம். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் பயணத்தில் இப்போது நடந்திருப்பது சிறு உராய்வுதானே ஒழிய பிளவு என்று மிகைப்படுத்திக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக பல்வேறு பிரிவுகள் உள்ளன. தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை சில லட்சம் பேர் கிளை பரப்பி உள்ள மாபெரும் இயக்கம் இது. இந்தக் கட்டமைப்பில் எங்காவது சிதறி இருக்கிறதா? அத்தனை பேரும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவை தலைமை தாங்க அழைத்து, அவர் ஒருவரால்தான் இந்த இயக்கத்தை வலிமையாக, எதிரிகளை எதிர்த்து நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

அமைப்பு ரீதியாக உள்ள 50 மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் என அனைவரும் சசிகலாவின் தலைமையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சிலர் வாதிடுவது போல் ஓ.பி.எஸ். பொருளாளர், மதுசூதனன அவைத் தலைவர் என்றால் அவர்களுக்கு பின்னால் கழகத்தின் அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் எத்தனைபேர் உள்ளனர் என்பதை அவர்கள் கூறட்டும்.

அவர்களிடம் இருப்பவர்கள் அங்கங்கே பதவி இழந்து பழைய 500, 1000 ரூபாயைப் போல செல்லாக்காசாகி விட்டார்கள். செல்லும் காசாக தங்களை மாற்றிவிட எதிரிகளாக கூட்டணி வைத்துச் செயல்படுபவர்கள்.

இன்று அவர்களுக்குப் பின்னால் சென்ற சில சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு தவறை உணர்ந்து மீண்டும் தாய் வீட்டிற்கு வருவது உறுதி.

மாவட்டச் செயலாளர்கள் தவிர தலைமைக் கழக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் மாநில செயலாளர்கள், பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் இடம் எதுவோ அதற்குத்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் கிடைக்கும்.

அது மட்டும் அல்லாமல் 122 சட்டமன்ற உறுப்பினர்கள், 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் ஆளும் தலைமை என்ற உயரிய அங்கீகாரம் இதையெல்லாம் விட வேறென்ன தகுதி வேண்டும்? இரட்டை இலை எங்களுக்குத்தான் என்பதில்.

தேர்தலில் அ.தி.மு.க.வை உடைக்க உருவாக்கப்பட்ட தீபா முகாம் கலகலத்துப் போனதால், இரண்டாவதாக எதிரிகளால் தயாரிக்கப்பட்டவர்தான் ஓ.பி.எஸ். இந்த இருவரையும் யார் ஆதரிக்கிறார்கள். யார் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த வி‌ஷயம்தான்.

இன்று தமிழிசை, எச்.ராஜா போன்றவர்கள் “இரட்டை இலையை முடக்கும் வாய்ப்பு உள்ளது” என்று கூறுவதைப் பார்த்தால், இதற்குப் பின்னால் பெரும் சக்தி உள்ளதாகவே தெரிகிறது. தேர்தல் ஆணையம் தொடங்கி நீதிமன்றங்கள் வரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்ற அவர்களின் செயல்திட்டம் திராவிட மண்ணுக்கு எளிதாகவே புரியும்.

அவர்கள் முடக்க நினைப்பது இரட்டை இலையை மாத்திரமல்ல. அம்மாவின் புகழை ஆட்சியின் மாட்சியையும்தான். தி.மு.க.வில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது அவர்களால் அக்கட்சியின் அமைப்பு ரீதியான பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரிந்த போதும் தி.மு.க.வின் சின்னம் முடக்கப்படவில்லை. வைகோ அதுகுறித்து வருத்தப்படவில்லை.

ஆனால் இன்று ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்திடம் மனு அளிப்பதன் நோக்கமே, தமிழ்நாட்டில் சிலர் வெளிப்படையாகப் பேசி வருவதைப் போல இரட்டை இலையை முடக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசையை நிறைவேற்றத் துணை போகும் கருவியாக, கையாளாக மாறி இருப்பவர் ஓ.பி.எஸ்.

துரோகிகளின், எதிரிகளின் கூட்டுச்சதியை முறியடித்து அ.தி.மு.க. தன்னுடைய ஆட்சியை, அம்மாவின் புகழை, இந்த இயக்கத்தை எப்படி தக்க வைத்துக்கொண்டதோ அதுபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை வெற்றி காண வைத்து தன் பெருமையைத் தக்க வைக்கும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Label