OUR CLIENTS
தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் யோசனை
தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் யோசனை Posted on 21-Mar-2017 தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் யோசனை

சென்னை, மார்ச் 21
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ந் தேதி இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். சிங்கள கடற்படையினரின் இத்தாக்குதலை கண்டித்து 11 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மீனவர்கள் 18-ந் தேதி, தான் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகில் நேற்று முன்தினம் அதிகாலை தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு படகுகளில் வந்த சிங்கள கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நாகை முதல் ராமேசுவரம் வரை உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எல்லாம் சிங்களப்படையினரால் தாக்கப்படுவது அல்லது கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.

இலங்கை அரசை இந்தியா தொடர்புகொண்டு தமிழக மீனவர்கள் மீது இனி ஒருமுறை தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்து இருந்தால், நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்காது.

சொந்த நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை அந்த நாட்டு அரசே வேடிக்கை பார்க்கும் கொடுமை இந்தியாவை தவிர வேறு எங்கும் நடக்காது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் தமிழக அரசு அக்கறை காட்ட மறுப்பது தான் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்புவது குறித்து ஆராய வேண்டும்.

தமிழக காவல்துறை குழு கடலில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டும் செல்ல முடியும் என்றாலும் கூட, இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசு எதையும் செய்யும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காகவாவது இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

Label