OUR CLIENTS
இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒருவகை அரசியல் யுக்திதான்: திருமாவளவன் விளக்கம்
இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒருவகை அரசியல் யுக்திதான்: திருமாவளவன் விளக்கம் Posted on 21-Mar-2017 இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒருவகை அரசியல் யுக்திதான்: திருமாவளவன் விளக்கம்

சென்னை, மார்ச் 21
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு

பதில்: மக்களுக்கான பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடுவதற்கு என உருவானதுதான் மக்கள் நலக்கூட்டியக்கம்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டியக்கம் கூட்டணியாக மாறி தேர்தலை சந்திப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முயற்சித்தது.

இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கடந்த இடைத்தேர்தலில் எடுத்த முடிவையே தற்போதும் எடுப்போம் என்று கூறினோம். இதனால் மக்கள் நலக்கூட்டணி உருவாகவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தற்போது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியோடும், விடுதலை சிறுத்தையோடும் தமது நிலைப்பாட்டை விளக்கிய பின்னரே போட்டியிடுவது என்று தனித்து முடிவெடுத்துள்ளது.

இதனால் மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தலுக்கான கூட்டணியாக உருவாகவில்லையே தவிர போராட்டங்களுக்கான கூட்டியக்கமாக தொடர்வதில் சிக்கல் இல்லை.

ஏனெனில் இது குறித்து நாங்கள் மூவரும் விரிவாக விவாதித்தோம். எனவே உடைந்ததா? என்ற கேள்வி எழவில்லை.

கே. தி.மு.க.வை ஆதரிப்பது என்று விடுதலை சிறுத்தையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் முடிவு செய்ததால்தான் இந்த சிக்கல் எழுந்ததாக கூறப்படுகிறதே?

ப: இதுவெறும் யூகமே ஆகும். தி.மு.க. வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. அதில் ரகசியம் இல்லை. ஆளும் கட்சி தரப்பில் இருந்தும் மக்கள் நலக்கூட்டியகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஓ.பி.எஸ். தரப்பினரும் எங்கள் 3 கட்சியினரோடு ஒரு சிலர் ஆதரவு கேட்டு பேசினார்கள்.

மக்கள் நலக்கூட்டியக்க கலந்தாய்வு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியதால் மக்கள் நலக்கூட்டியக்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதம் நடத்தினோம். யாரை ஆதரிப்பது என்ற விவாதம் எழவே இல்லை.

ஆனாலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மக்கள் நலக்கூட்டியக்கம் வேட்பாளரை நிறுத்துவதை விட மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் யாரையாவது ஆதரிப்பது தான் சரி என்ற விவாதத்தை முன் வைத்தது. இதனால் 4 நாட்கள் விவாதம் நீண்டது.

இறுதியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடவும் வேண்டாம். யாரையும் ஆதரிக்கவும் வேண்டாம் என்ற கருத்தை ஆலோசனையாக வைத்தது. அந்த நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் வரவேற்றோம். ஆகவேதான் இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது.

கே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்? வேறு உள்நோக்கம் உண்டா?

ப: இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தையும் ஒருமித்த முடிவு எடுத்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தன்னுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த நிலைப் பாட்டில் உடன்பாடு இல்லாததால் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க இயலவில்லை.

கே. தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமில்லையா?

ப: தேர்தலை புறக் கணிப்பது என்பது வேறு.. தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவது என்பது வேறு. நாங்கள் புறக்கணிக்க வில்லை. போட்டியிடாமல் விலகி இருக்கிறோம்.

புறக்கணிப்பு என்றால் கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் ஓட்டு போடாமல் எதிர்ப்பது ஆகும். பொதுமக்களையும் ஓட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்வதாகும்.

ஆகவே நாங்கள் புறக்கணிக்கவில்லை. விலகி இருக்கிறோம். இது தேர்தல் களத்தில் ஒருவகை யுக்தியே யாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Label