OUR CLIENTS
ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் திடீர் தள்ளி வைப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் திடீர் தள்ளி வைப்பு Posted on 22-Mar-2017 ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் திடீர் தள்ளி வைப்பு

சென்னை, மார்ச் 22-
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல் -அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. 

அ.தி.மு.க.வில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என 2 அணிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும்  அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினரை ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்கிற அமைப்பை  தொடங்கி நடத்தி வருகிறார். 

ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்த தீபா, அங்கு வெற்றி பெறும் முனைப்புடன் காய் நகர்த்தி வருகிறார். 

தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தி.நகர்  சிவஞானம் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் கூடிய போதும், தீபா பேரவையை தொடங்கிய பின்னரும் தொண்டர்களை சந்திப்பதில் பெரும் பங்கு வகித்தவர் அவரது கணவர் மாதவன். மாலையில் தீபா தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாகவே வைத்துள்ளார். ஆனால் காலை நேரங்களில் அவரது கணவர் மாதவன் தொண் டர்களையும் நிர்வாகி களையும் சந்தித்து பேசி வந்தார். 

தொண்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தீபாவிடம் எடுத்துக் கூறி பேரவையை வழிநடத்துவ திலும், ஒருங்கிணைத்து செயல்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார். அதே நேரத்தில் தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே பேரவையை வழி நடத்திச் செல்வதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் மோதல் இருந்து வந்தது. இது கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூகம்பமாக வெடித்தது. 

தீபாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவரது கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அதிரடியாக அறிவித்தார். தீபா பேரவைக்குள் தீய சக்திகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்த அவர் சசிகலாவே தீபாவை இயக்குகிறார் என்றும் கூறியுள்ளார். 

சசிகலாவை எதிர்த்தே தீபா அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் கணவர் மாதவன், தீபாவை இயக்குவதே சசிகலாதான் என்று கூறி இருப்பது பேரவைக்குள் புதிய புயலையும் வீசச் செய்துள்ளது. பேரவையில் இருந்து மாதவன் வெளியேறியது தீபாவுக்கு பின்னடைவாக இருந்து வரும் நிலையில் தீபா மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார். ஆனால் அது திடீரென நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு தீபா செல்கிறார். அப்போது தீபா பேரவை நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் செல்கிறார்கள். வேட்பு மனுவை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கிவிட்டு தீபா ஆர்.கே.நகரில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபா அதனை நாளைக்கு தள்ளி வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இன்று நல்ல நாள் இல்லை என்றும், அதனாலேயே தீபா நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது இன்று தெரிந்து விடும். அதன் முடிவுக்காகவே தீபா காத்திருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் கூறினர். ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு வசதியாகவே தீபா காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Label