OUR CLIENTS
பவானி ஆறு தடுப்பணை குழு போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்கும் : வைகோ அறிவிப்பு
பவானி ஆறு தடுப்பணை குழு போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்கும் : வைகோ அறிவிப்பு Posted on 23-Mar-2017 பவானி ஆறு தடுப்பணை குழு  போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்கும் : வைகோ அறிவிப்பு

சென்னை, மார்ச் 23-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 2015-ல் நான் தொடுத்த ரிட் மனுவின் மீது தீர்ப்பளித்த நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் தமிழ்நாடு எங்கும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக நீர்நிலைகள், நீர்வரத்துக் கால்வாய்களில் சீமைக்கருவேல மரங்களை முற்றாக அகற்ற ஆணை பிறப்பித்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வழிகாட்டினர்.

ஆனால், பொதுப்பணித்துறை கண்மாய்கள் பலவற்றில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. நீதிபதிகள் தங்கள் ஆணையில் தெரிவித்தவாறு சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றுவதோடு, அதற்குத் தேவையான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்களில் விவசாயிகளும், ஆயக்கட்டுதாரர்களும் கரம்பை மண் எடுப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்.

ம.தி.மு.க. ஆதரவு
காவிரி நடுவர்மன்றத் தீர்ப்புக்கு எதிராக பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 6 இடங்களில் தடுப்பணைகள் கட்ட முயற்சித்தது. இதில் தேக்குவட்டை எனும் இடத்தில் தடுப்பணையைக் கட்டி முடித்துவிட்டது.

கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி ஆறு தடுப்பணை தடுப்புக் குழு மேற்கொள்ள இருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு கேட்டு, அதன் தலைவர் காசியண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் ஈரோடு பொன்னையன், பேராசிரியர் கணகுறிஞ்சி, பொறியாளர் ராமசாமி ஆகியோர் என்னை கடந்த 21-ந் தேதி கட்சி அலுவலகமான தாயகத்தில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர்.

அதன் அடிப்படையில் பவானி ஆறு தடுப்பணை தடுப்புக் குழு நடத்தும் அனைத்து அறப்போராட்டங்களிலும் ம.தி.மு.க. முழுமையாகப் பங்கேற்கும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Label