OUR CLIENTS
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்வேன் : அமெரிக்க வாழ் தமிழர்களிடம் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உறுதி
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்வேன் : அமெரிக்க வாழ் தமிழர்களிடம் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உறுதி Posted on 06-Apr-2017 ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்வேன் : அமெரிக்க வாழ் தமிழர்களிடம் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உறுதி

வாஷிங்டன், ஏப். 6-
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் மார்கண்டேய கட்ஜூ. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழ் மொழி மீது பற்றுகொண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்தவர். இதனால் தமிழர்கள் மற்றும் தமிழர் கலாசாரத்தின் மீதும் மதிப்பு கொண்டார். ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

மார்கண்டேய கட்ஜூ கடந்த வாரம் அமெரிக்கா சென்று, அங்கு தமிழர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி, தமிழக விவசாயத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பால்பாண்டியன், சுபின், வெற்றிசெல்வன், சக்தி, கால்டுவெல் வேல்நம்பி, ஹூஸ்டன் பெருமாள், வெர்ஜீனியா கவிதா உள்பட பலர் மார்கண்டேய கட்ஜூவை சந்தித்து, நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் பற்றியும், அதன் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர்.

மக்கள் வசிக்காத பாலைவனத்தில் மேற்கொள்ள வேண்டிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, நன்றாக விவசாயம் நடைபெறும் பூமியில் மேற்கொண்டு, அந்த இடத்தை பாலைவனமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக அவர்கள் கூறினர். அவர்களிடம் மார்கண்டேய கட்ஜூ கூறியதாவது:-

மக்களையும், விவசாயத்தையும், குடிநீரையும், சுற்றுச்சூழலையும் பாதிக்காத அறிவியல் தான் நமக்கு வேண்டும். ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும் என்றால், அந்த திட்டம் தமிழகத்துக்கு வேண்டாம். அரசாங்கம் வியாபார நோக்கத்தில் செயல்படக் கூடாது. முதலில் மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடும் தமிழக மக்களுக்கு சட்டப்படியான உதவிகளை செய்வேன். போராடுபவர்கள் அழைப்பு விடுத்தால், தமிழ்நாட்டுக்கு நேரில் செல்வேன். இந்த திட்டத்தை முற்றிலும் தடை செய்ய உதவி செய்வேன்.

அமைதி வழி போராட்டங்கள் நடத்த ஒவ்வொருவருக்கும் சட்டத்தில் உரிமை உண்டு. இந்த உரிமையை தடுப்பது மனித உரிமை மீறல். தமிழ்நாட்டில் அண்மையில் ‘உழவே தலை’ மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுப்பது மனித உரிமை மீறல். இவ்வாறு அவர் கூறினார். 

Label