OUR CLIENTS
பன்னீர்செல்வம் பிரசாரத்தில் வன்முறை... போலீசார் தடியடி!
பன்னீர்செல்வம் பிரசாரத்தில் வன்முறை... போலீசார் தடியடி! Posted on 07-Apr-2017 பன்னீர்செல்வம் பிரசாரத்தில் வன்முறை... போலீசார் தடியடி!

சென்னை, ஏப். 7-
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க. கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசாரத்தை தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

வாக்காளர்களை வணங்கியபடி திறந்த ஜீப்பில் மின்கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி ஊர்வலமாக சென்றார். அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், கூட்டணி கட்சி தலைவரான இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவகர் அலி ஆகியோரும் பிரசார ஜீப்பில் உடன் இருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவருடைய அணி சார்பில் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் நேற்று அவருக்கு 11 பேர் அடங்கிய துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். துணை ராணுவப்படையினர் பிரசார வாகனத்துக்கு முன்னும், பின்னும் அரண் போல சென்றனர்.

இந்த நிலையில், நேதாஜி நகர் மசூதி அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வாகனம் வந்தபோது, அங்கு தேர்தல் பணிமனை அமைத்திருந்த அ.தி.மு.க. கட்சியினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது முற்றி தகராறாக மாறியது. தொப்பி அணிந்திருந்தவர்கள் திடீரென்று கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் பாதுகாப்புக்கு வந்திருந்த துணை ராணுவ வீரர் ஒருவரின் மண்டை உடைந்தது. 

3 போலீசார் காயம் அடைந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. தொப்பி அணிந்தவர்களை ஓ.பன்னீர்செல்வம் கட்சியை சேர்ந்தவர்கள் விரட்டிச் சென்றனர். ஆனால், தொப்பி அணிந்தவர்கள் தேர்தல் பணிமனைக்குள் புகுந்து விட்டனர். போலீசார் பணிமனை அலுவலகத்தை வெளியே பூட்டி விட்டனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசாரம் மீண்டும் தொடங்கி நேதாஜி சிலை அருகே வந்தது. அங்கு மதுசூதனன் தனக்கு ஆதரவு திரட்டி வாக்காளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் எப்போது பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில், மதுசூதனன் தனது பேச்சை முடித்துவிட்டு, மைக்கை ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்க முயன்றார். அப்போது, பிரசார வாகனத்துக்கு பின்புறம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பிரசார வாகனத்தின் முன்புறம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் பின் பக்கம் வருமாறு அழைப்பு விடுத்தனர். உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வாகனத்தையும் அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். 

அவர்கள் அறிவுறுத்திய ஒரு சில நொடிகளில் மீண்டும் மோதல் உருவானது. மீண்டும் கற்கள் பறந்தன. இரும்பு கம்பிகளாலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு அடி விழுந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த சாதிக் என்ற மாற்றுத்திறனாளி வாலிபர், மதுரையை சேர்ந்த கொம்பையா தேவன் உள்பட 3 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் வடிந்தது. இதனால் நிலைமை மோசமானது.

பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வியாபாரிகளும் உடனடியாக கடைகளை அடைத்தனர். கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு, இரண்டு தரப்பினரையும் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வாகனம் புறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தபடி சென்றார். அவரது பயணத்திட்டத்தின்படி, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தனது பேச்சுடன் நேற்றைய பிரசாரத்தை நிறைவு செய்வதாக இருந்தது. இதையடுத்து, அவருடைய பேச்சை கேட்பதற்காக வைத்தியநாதன் மேம்பாலம் அருகே அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்திருந்தனர். அங்கு மீண்டும் மோதல் சம்பவம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவப்படை வீரர்களும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள் அமைத்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் வந்து என்ன பேசப்போகிறார் என்று அவருடைய அணியை சேர்ந்தவர்களும், பத்திரிகையாளர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். இரவு 10 மணியாகியும், ஓ.பன்னீர்செல்வம் அங்கு வரவில்லை. அவர் பாதியிலேயே பிரசாரத்தை ரத்து செய்து திரும்பிச் சென்றுவிட்டார்.

கல்வீச்சில் காயம் அடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறும் போது, நாங்கள் அமைதியான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தோம். எங்களுக்கு திரண்ட ஆதரவை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல், அ.தி.மு.க.(அம்மா) கட்சியை சேர்ந்த ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் தான் கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் ஒரு சார்பாக பணியாற்றுகிறார்கள். கல்வீச்சில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினர்.

நேதாஜி நகரில் ஓ.பன்னீர்செல்வம் பிரசார வாகனத்தில் அவரும், மதுசூதனனும் சென்றனர். மதுசூதனன் காரும் ஓ.பன்னீர்செல்வத்தின் காரும் பிரசார வாகனத்தின் பின்னால் வந்து கொண்டிருந்தது. நேதாஜி நகரில், நேதாஜி சிலை அருகே கல்வீச்சு சம்பவம் நடந்த போது மதுசூதனன் காரின் பின்பக்க கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது.

Label