OUR CLIENTS
வருமானவரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்... அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி!
வருமானவரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்... அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி! Posted on 10-Apr-2017 வருமானவரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்... அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி!

சென்னை, ஏப். 10-
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கடந்த வாரம் ஆளும்கட்சி சார்பில் தலா ரூ.4 ஆயிரம் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக எதிர்க் கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தன.

இதையடுத்து அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 7-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சென்னையில் உள்ள அரசு பங்களா, எம்.எல்.ஏ.க்கள் அறை, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜய பாஸ்கர் வீடு, சென்னை, திண்டுக்கல், நாமக்கல்லில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, திருச்சியில் உள்ள குவாரி ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.

அதே நேரத்தில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, சாலி கிராமத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் விஜயபாஸ்கர் வீடு மற்றும் எம்.எல்.ஏ. விடுதி அறையில் இருந்து சுமார் ரூ.6 கோடி பணம், முக்கிய ஆவணங்களும் சிக்கின. ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் சிக்கியது. சரத்குமார் வீட்டில் ரூ.10 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதே போல் டாக்டர் கீதா லட்சுமி வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் 35 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கிய பணம் மற்றும் ஆவணங்கள் வருமான வரித்துறை கருவூலத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு நேற்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவி விடப்பட்டிருந்தது.

அதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதா லட்சுமி ஆகியோர் இன்று வருமா வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் தனித்தனி அறைகளில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் பற்றி விளக்கம் கேட்டனர். அதற்கு 3 பேரும் விளக்கம் அளித்தனர்.

Label