OUR CLIENTS
அதிமுகவை காப்பாற்ற கடைசி முயற்சி - அமைச்சர்களை கசக்கி பிழியும் தினகரன்?
அதிமுகவை காப்பாற்ற கடைசி முயற்சி - அமைச்சர்களை கசக்கி பிழியும் தினகரன்? Posted on 15-Apr-2017 அதிமுகவை காப்பாற்ற கடைசி முயற்சி - அமைச்சர்களை கசக்கி பிழியும் தினகரன்?

சென்னை, ஏப்.15-
அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதே செல்லாது என்று, கட்சியின் அடிப்படை விதிகளை மேற்கோள் காட்டி, பன்னீர்செல்வம் தரப்பினர், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணையை துவங்குவதற்கு முன்பாக, கடந்த சில நாட்களுக்கு முன், கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை, எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவெடுக்க, விவாதம் நடத்தப்பட்டது. பின், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, தொப்பி மற்றும் இரட்டை மின் கம்பம் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், வரும் 17க்குள், சசிகலாவின் பொதுச் செயலர் நியமனம் மற்றும் இரட்டை இலை சம்பந்தமாக கூடுதல் தகவல்கள் எதுவும் இருந்தால், அதை, தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும், தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இரண்டு தரப்பிலும், கூடுதல் ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷன் முன்பாக தாக்கல் செய்வதில் தீவிரமாக உள்ளன.

அ.தி.மு.க., எங்கள் தரப்புக்கே சொந்தம் என உரிமை கொண்டாட, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பும் முட்டி மோதும் சூழலில், கட்சியின் ஒன்றரை கோடி உறுப்பினர்களில் எங்களிடம் மட்டும் 42 லட்சத்துக்கும் கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதமாக, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பிரமாண பத்திரங்களை, பன்னீர்செல்வம் தரப்பினர், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். தற்போது, இன்னும் கூடுதலான எண்ணிக்கையில், பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவும் தயாராகி வருகின்றனர்.

அவர்களுக்கு ஈடாக, சசிகலா தரப்பும், கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரனின் உத்தரவின் பேரில், தமிழக முழுவதும், கிளைக் கழகம் மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட, கீழ் நிலையில் உள்ளவர்களிடமும், பிரமாண பத்திரங்களை வாங்கி வருகின்றனர். இதற்காக, மாநிலம் முழுவதும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் என, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அவ்வளவு பேரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். 

இப்படி பிரமாண பத்திரம் எழுதிக் கொடுப்பதற்கு, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியின் அத்தனை நிர்வாகிகளும் சொல்லி வைத்தார் போல, லட்சக்கணக்கில் பணம் கேட்க, ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, பிரமாண பத்திரங்களை வாங்கி வருகின்றனர் நிர்வாகிகள்.

அவர்களுக்கு செலவு செய்ய முடியாமல், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் என, கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் பலரும் மூச்சு முட்டி நிற்பதாகக் கூறப்படுகிறது.

Label