OUR CLIENTS
அதிமுகவில் இரு அணிகளையும் இணைக்க ஐவர் குழு அமைப்பு!
அதிமுகவில் இரு அணிகளையும் இணைக்க ஐவர் குழு அமைப்பு! Posted on 17-Apr-2017 அதிமுகவில் இரு அணிகளையும் இணைக்க ஐவர் குழு அமைப்பு!

சென்னை, ஏப். 17-
கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக் கும் முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தினகரனை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், சசிகலா அணி, ஆட்சியை தக்க வைத்தது; ஆனாலும், குழப்பம் தொடர்கிறது. கட்சி இரண்டாக உடைந்ததில், இரட்டை இலை சின்னமும் பறிபோயுள்ளது. எந்த நேரமும் ஆட்சிக்கு ஆபத்து என்ற சூழ்நிலையும் நிலவுகிறது. ஒரு வேளை ஆட்சி கலைந்து, தேர்தல் வந்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தும் வரை, கட்சியைக் காப்பாற்ற முடியாது என்பதை, சசிகலா அணியிலுள்ள சீனியர்கள் பலரும் உணரத் துவங்கியுள்ளனர். 

குறிப்பாக, தினகரனின் தலைமையை ஏற்க, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை என்பதை அனுபவபூர்வமாக, அமைச்சர்கள் பலரும் அறிந்துள்ளனர். சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், அவருடனான தொடர்பை, கொஞ்சம் கொஞ்ச மாக குறைக்க துவங்கி யுள்ளனர். அடுத்த கட்டமாக, தினகர னையும் கட்சியில் இருந்து ஒதுங்கும்படி, போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு, முதல் வர் பழனிசாமியும் ஆதரவாக இருப்பதால், கட்சியை இணைக்கும் முயற்சிக்கு, அவர் பச்சைக்கொடி காட்டி உள்ளார். அதனால்,ஐந்து பேர் இடம் பெற்ற குழு, தீவிரமாக களமிறங்கி உள்ளது.லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி., வைத்திலிங்கம், அமைச்சர் கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோர் இடம்பெற்ற ஐவர் அணியே, இந்த இணைப்பு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பூனைக்கு யார் மணி கட்டுவது என, பலரும் தயங்கிய நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களே, இந்த விஷயத்தை துணிச்சலுடன் முன்வைத்துள்ளனர். இதுபற்றி பேசுவதற்காக, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, தினகரனை வரவைப்பதற்கு, இவர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அங்கு வந்தால், முதல்வரும் அந்த விவாதத் தில் பங்கேற்றிருக்க முடியும். இதற்காகவே, அதை தினகரன் தரப்பு தவிர்த்து விட்டதாகத் தெரிகிறது.

அதனால், வேறு வழியின்றி, தினகரன் வீட்டிற்கே சென்று, ‘நீங்கள் கட்சியிலிருந்து  ஒதுங்கிக் கொள்ளுங்கள்’ என்று, ஐவர்அணி நேரடியாக வலியுறுத்தியுள்ளது. சீனியர் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வழி மொழிந்துள்ளனர். தினகரன் பரிந்துரையால், பதவி கிடைத்த செங்கோட்டையன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாகவும், பன்னீருக்கு எதிராகவும் பேசிஉள்ளனர்.

எதிரணியில் இருப்போருக்கு முக்கிய பொறுப் புகள் கொடுத்து, கட்சியில் சேர்த்தாலும், பன்னீரைச் சேர்க்கக் கூடாது என, அவர்கள் கடுமையாக வாதாடியுள்ளனர். அதற்கு, ஐவர் அணியைச் சேர்ந்தவர்கள், ‘பன்னீரை விலக்கி விட்டு, அந்த அணியில் இருப்போரை அழைத்து வந்தாலும், இணைப்பு நடவடிக்கை வெற்றி பெறாது; அவரை அழைத்து வந்து, அவருக்கு கட்சியில் பொதுச் செயலர் பதவி தரலாம்.

‘ஏழு பேர் இடம் பெறும், வழிகாட்டுதல் குழுவை அமைத்து, கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்‘ என, கூறியுள்ளனர். இந்த முடிவுக்கு, சசிகலா அணியில் ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. ஐவர் அணியின் முயற்சி வெற்றியடைய வாய்ப்புள்ளதாக, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்த நம்பிக்கை ஜெயிக்கும்பட்சத்தில், கட்சி ஒன்றாகி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, இரட்டை இலைச் சின்னத்துடன், அ.தி.மு.க., எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது ஆளும் கட்சி வட்டாரம்.

Label