OUR CLIENTS
சசிகலாவை விரட்டிய ஓ.பி.எஸ்.!
சசிகலாவை விரட்டிய ஓ.பி.எஸ்.! Posted on 20-Apr-2017 சசிகலாவை விரட்டிய ஓ.பி.எஸ்.!

சென்னை, ஏப். 20-
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமென்றால் சசிகலா குடும்பத்தினரை விரட்டியடித்தால்தான் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்று நிபந்தனை விதித்து ஓ.பன்னீர் செல்வம் அதை செய்து காட்டி சாதித்துள்ளார்.

கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் ஆண்டிப்பட்டி தேர்தலில் ஜெயலலிதா நடத்தும் தேர்தல் பிரசாரத்தை வீடியோ எடுக்க அறிமுகமானவர்தான் இந்த சசிகலா. இதனால் அடிக்கடி போயஸ் கார்டனுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு தூபம் போட்டு போட்டு கிட்டத்தட்ட அவரை தங்களுக்கு சாதகமானவராக மாற்றியவர்கள் சசிகலாவும், அவரது கணவர் நடராஜனும்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றி 1991-ஆம் ஆண்டு அதிமுக அரியணை ஏறியது. ஜெயலலிதா முதல்வரானார். அன்றைய காலகட்டத்தில் அவரது அண்ணன் குடும்பத்தினரை ஒண்ட விடாமல் தனது உறவினர் சுதாகரனை ஜெயலலிதா தத்தெடுக்க வைத்தார் சசிகலா.

பின்னர் சுதாகரனுக்கு சிவாஜி கணேசனின் பேத்திக்கு ஊரே மெச்சும் அளவுக்கு ஆர்ப்பாட்ட திருமணம் செய்து வைத்து பெரும் சிக்கலில் சிக்கினார். இதனால் 1996-இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் சுதாகரனுக்கும் தனக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் ஜெயலலிதா அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து 2001-இல் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து அவர் ஜெயித்தாலும், தோற்றாலும் அவர்களுடன் சசிகலா குடும்பத்தினர் அட்டை போல் ஒட்டி கொண்டனர். ஒரு கால கட்டத்தில் கட்சியில் கொங்கு மண்டல் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களை சசிகலாவும், நடராஜனும் ஆட்சி படைத்ததை அறிந்த ஜெயலலிதா அவர்களை விரட்டி விட்டார்.

இதைத் தொடர்ந்து ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்க மாட்டேன் என்று கூறி மன்னிப்பு கடிதம் அளித்து சசிகலா மட்டும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் நடராஜன் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் அவர் வடிவமைத்துக் கொடுத்த திட்டங்களை சசிகலா அப்படியே செயல்படுத்தினார்.

ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தனி ராஜ்ஜியத்தையே நடத்தி வந்தார். பெரும்பாலான கட்சியினர் சசிகலாவின் ஆதரவாளர்கள் போல் செயல்பட்டனர். ஜெயலலிதா பெயரசை் சொல்லி தனி ராஜ்ஜியமே நடத்தியது சசி குடும்பம்.

அரசு டென்டர்கள், புதிய தொழிற்சாலை தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை சசிகலாவுக்கு காணிக்கை கொடுத்தே நிர்வாகிகள் ஓய்ந்து போனார்கள். தொட்டதெல்லாம் ஊழல்தான். இதனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டவுடன் சசிகலாவின் அதிருப்தியாளர்கள் ஓ.பன்னீர் செல்வம் பின்னால் அணி வகுத்தனர்.

சசிகலா சிறை சென்றவுடன் தினகரன் ஆடிய ஆட்டத்தையும், ஆழம் தெரியாத காலை விட்டதையும் சசிகலா தரப்பு நிர்வாகிகளால் பொறுக்க முடியவில்லை. இதனால் அதிமுகவை இணைக்க பன்னீர் செல்வம் பச்சைக் கொடி காட்டியவுடன் இதுதான் சாக்கு என்று சசிகலா குரூப்பை விரட்ட மூத்த அமைச்சர்கள் திட்டமிட்டனர்.

சசிகலா, தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம் என்று கறாராக ஓ.பன்னீர் செல்வம் சொன்னதுதான் தாமதம். உடனே இரவோடு இரவாக அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி சசிகலா, தினகரனுக்கு ஆப்படித்தனர். இதை தர்மயுத்தத்தின் முதல் வெற்றி என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

சசிகலா குடும்பம் தன்னைச் சுற்றி வளைத்துள்ளது என்பதை உணர்ந்தும் கூட அதை விரட்ட முடியாமல், விலக்க முடியாமல் தவித்து வந்தவர் ஜெயலலிதா. அதற்கு என்ன காரணம் என்பது இதுவரை யாருக்குமே புரியவில்லை. ஆனால் ஜெயலலிதாவால் கூட முடியாததை, எதை எதையோ சாதித்த ஜெயலலிதாவால் கூட முடியாததை, ஓ.பி.எஸ். சத்தமின்றி சாதித்துள்ளது அதிமுகவினர் மத்தியிலேயே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Label