OUR CLIENTS
நள்ளிரவில் 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை... அ.தி.மு.க. இரு அணிகள்!
நள்ளிரவில் 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை... அ.தி.மு.க. இரு அணிகள்! Posted on 26-Apr-2017 நள்ளிரவில் 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை... அ.தி.மு.க. இரு அணிகள்!

சென்னை, ஏப். 26-
ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அவர் முதல்-அமைச்சராக வேண்டும் என்று சில அமைச்சர்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். எனவே அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இதையடுத்து ஜெயிலுக்கு செல்லும் முன்பு அவர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். இதற்கிடையே தினகரன் அணி சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை கோரியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் அணி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கின. எனவே ஆர்.கே. நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கினார். இதனால் எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கான முயற்சிகள் தொடங்கின. சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தினகரன் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மேலும் அவர் விசாரணைக்காக டெல்லி சென்றார். எனவே இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக மும்முரம் காட்டினர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பேட்டி அளித்த போது, “அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு உகந்த நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார். ஓ.பி.எஸ். அணியினர் வைத்திருந்த கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருந்ததால் முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கலாம். பின்னர் கோரிக்கை பற்றி பரிசீலிக்கலாம் என்று எடப்பாடி அணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று இரவு தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. நேற்று இரவு எடப்பாடி மற்றும் ஓபி.எஸ். அணியைச் சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினர். எடப்பாடி அணி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., செங்கோட்டையன் ஆகியோரும், ஓ.பி.எஸ். அணி சார்பில் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோரும் இந்த ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணி வரை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளின்படி இன்று பிற்பகலில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி இன்று பிற்பகலில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்குகிறது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பி.எஸ். அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் நத்தம் விசுவநாதன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Label