OUR CLIENTS
சசிகலாவை நீக்கி விட்டு அ.தி.மு.க. இரு அணிகள் இணைய வேண்டிய அவசியம் இல்லை... நாஞ்சில் சம்பத்!
சசிகலாவை நீக்கி விட்டு அ.தி.மு.க. இரு அணிகள் இணைய வேண்டிய அவசியம் இல்லை... நாஞ்சில் சம்பத்! Posted on 26-Apr-2017 சசிகலாவை நீக்கி விட்டு அ.தி.மு.க. இரு அணிகள் இணைய வேண்டிய அவசியம் இல்லை... நாஞ்சில் சம்பத்!

சென்னை, ஏப். 26-
கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்கிவிட்டு அ.தி.மு.க 2 அணிகளும் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் பா.ஜனதாவிடம் விலை போய்விட்டார். அவர்களின் பழிவாங்கும் நடவடிக்கையாக தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவர்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

2 அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு உகந்த நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது என ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு தெரிவித்தார். தினகரன் கைது செய்யப்படுவார் என அப்போதே எனக்கு தெரிந்து விட்டது.

ஓ.பி.எஸ்.சுக்கு பா.ஜனதா அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. அதற்கான அவசியம் இப்போது என்ன வந்தது. அவருக்கு பாதுகாப்பு எதற்கு. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனை கைது செய்தவர்கள் லஞ்சம் வாங்க முயன்றவர்களை கைது செய்யாதது ஏன்?

தற்போது அ.தி.மு.கவின் மீது அறிவிக்கப்படாத போரை பா.ஜனதா நடத்துகிறது. பேச்சுவார்த்தைக்கு உகந்த நேரம் வந்து விட்டது என்று கூறிவிட்டு இன்று தலைமை கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சசிகலா படத்தை அகற்றியது அற்பதனமானது.

அ.தி.மு.க அணிகள் ஒன்றாகி, நன்றாகி, பயணம் வெற்றிகரமாக நடக்க வேண்டுமானால் பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரின் திறமையான ஆளுமையின் தலைமையில் மட்டுமே முடியும்.

அதை விடுத்து கட்சியில் இருந்து சசிகலாவை விலக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க 2 அணிகளும் இணைய வேண்டிய அவசியம் இல்லை. கட்சி இணைந்து அவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்.

தற்போது 122 எம்.எல்.ஏ.க் கள், 38 எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கிறார்கள். மெஜாரிட்டியுடன் ஆட்சியும், கட்சியும் சிறப்பாக நடைபெறுகிறது. அதைவிட என்ன வேண்டும்.

ஆனால் கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் டி.டி.வி. தினரகன் ஒதுங்கி கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அது அவரது பெருந்தன்மையின் அடையாளம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Label