OUR CLIENTS
நிபந்தனையில்லாத பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!
நிபந்தனையில்லாத பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்! Posted on 02-May-2017 நிபந்தனையில்லாத பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!

சென்னை, மே. 2-
மே தினத்தையொட்டி, அ.தி.மு.க. (அம்மா) தென்சென்னை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த அரசு செயல்படாத அரசு, நிர்வாகம் முடங்கிக்கிடக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்று 75 நாட்களில் 1,560 கோப்புகளில் கையெழுத்திட்டு, அதற்குரிய ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதைக்கண்டு பொறுக்காத எதிர்க்கட்சியினர் தான், அரசு வேகமாக செயல்படவில்லை என்று பேசிவருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பல பாலங்கள் முறையாக திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டு பாதியில் விடப்பட்டன. ஜெயலலிதா ஆட்சியில், பாதியாக நின்ற திருமங்கலம், அண்ணா வளைவு, மூலக்கடை, வியாசர்பாடி, போரூர் உள்பட பல மேம்பால திட்டங்களில் இருந்த குறைகள் நீக்கப்பட்டு, மீண்டும் பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், பல பாலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

இப்போது பல்லாவரம், வேளச்சேரி சந்திப்பு, இரட்டை ஏரி ஒரு பகுதி, மாட்டுச்சந்தை, கோயம்பேடு சந்திப்பு, கீழ்க்கட்டளை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய பாலங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் வசதி பெற்றது இந்த ஆட்சியில் தான். திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் இன்னும் சில நாட்களில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இப்படி எல்லா பணிகளும் அதிவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், செயல்படாத அரசு என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.

கடுமையாக வறட்சி நிலவும் இந்த நேரத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வறட்சி பணிகளை மேற்பார்வையிட தனித்தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, குடிநீர் வழங்கலுக்கு முன்னுரிமை கொடுத்து வறட்சி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

குடிநீர் பிரச்சினைதீர குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது மேலும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் தண்ணீர் வழங்குவதற்காக மாற்று ஏற்பாடுகளான ஆழ்குழாய் கிணறுகள், லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை என்பது போன்ற பல பணிகளை மேற்கொள்ள போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் தான் குடிநீர் பற்றாக்குறை நேரத்தில்கூட மக்களை பாதிக்காத வகையில் தேவையான அளவுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, ஜெயலலிதாவின் அரசு விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக புதிய கடன்கள் வழங்குவதிலும், இன்சூரன்ஸ் பெற்றுத்தருவதிலும் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஏரி, குளங்களை குடிமராமத்து பணி மூலம் தூர்வாருவதற்காக ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, 1,519 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடந்துவருகின்றன.

மேலும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டுவிடும். அரசு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், வேண்டும் என்றே இந்த அரசு செயல்படவில்லை என்று எதிர்கட்சிகள் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத்தர தொடர்ந்து இடையறாது போராடிக் கொண்டிருக்கிறோம். இப்போதும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில், ‘நிபந்தனை இல்லாமல் இணைப்புக்கான பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்று கூறியது பத்திரிகைகளில் வெளிவந்தது. அவருடைய அந்தப் பேச்சுக்கு பிறகுதான், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘இதை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், ‘நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்று அறிவித்தார்கள். இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், திடீரென அவர்கள் அணி நிர்வாகிகள், சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள்.

ஒரு பேச்சுவார்த்தையின்போது, முன்கூட்டியே நிபந்தனைகளை போட்டுவிட்டு, அதன் பிறகு தொடங்க முடியாது. நிபந்தனையில்லாமல் பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு, இப்போது நிபந்தனை விதித்து பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்கள் தான். இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையும் ஆகும்.

ஆனால், அவர்கள் தினமும் ஒருவராக பேட்டி கொடுத்துக்கொண்டு வருவதுதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. பேச்சுவார்த்தையின்போது தான் எல்லாவற்றிலும் சுமுகமான முடிவை எடுக்க முடியுமே தவிர, நிபந்தனை போட்டுக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. ஆகவே, நிபந்தனை எதுவும் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் எல்லா தீர்வுகளையும் காண்பதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.வளர்மதி, எம்.பி.க்கள் நவ நீதகிருஷ்ணன், ஜெயவர்தன் உள்பட பலர் பேசினார்கள்.

Label