OUR CLIENTS
கருணாநிதி வைர விழா... மு.க.அழகிரி!
கருணாநிதி வைர விழா... மு.க.அழகிரி! Posted on 10-May-2017 கருணாநிதி வைர விழா... மு.க.அழகிரி!

சென்னை, மே. 10-
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8 மாதங்களாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலையை டாக்டர்களுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்கள் கவனித்து வருகின்றனர். இதனால் கட்சியின் முக்கிய தலைவர்கள் தவிர வேறு யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை மிக எழுச்சியாக கொண்டாட தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தினம் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவையும் சேர்த்து கொண்டாட உள்ளனர். இதற்காக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் 3-ந்தேதி இரவு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நேற்று மதியம் திடீரென கோபாலபுரம் இல்லம் சென்றார். அங்கு தனது தாயார் தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். மாடியில் இருந்த கருணாநிதியை சந்திக்கவில்லை.

அப்போது வீட்டு வாசலில் நிருபர்களை சந்தித்த மு.க.அழகிரி கூறியதாவது:-
எப்போதும் வீட்டுக்கு வந்து செல்வது போல் தாய் - தந்தையை பார்க்க வந்தேன். கருணாநிதி தூங்கிக் கொண்டிருந்ததால் நேரில் சந்திக்க முடியவில்லை. தாயார் தயாளுஅம்மாளை மட்டும் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.

சென்னையில் 3-ந்தேதி நடக்க உள்ள கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என்றார். கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, “இப்போது நான் கட்சியில் இல்லையே” என்றார்.

தி.மு.க. செயல் தலைவரும் தனது தம்பியுமான மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இருந்து அழகிரி கடந்த 2014-ம் ஆண்டு நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே உள்ளார்.

Label