OUR CLIENTS
பாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்!
பாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்! Posted on 10-May-2017 பாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்!

வேலூர், மே. 10-
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றில் மணல் கொள்ளையால் குடிநீர் பைப்புகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் பாலாறு வறட்சியின் காரணமாக வறண்ட பாலைவனமாக பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையினால் பாலாற்றில் மழைநீர் இருகரையையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. இதில் ஏற்கனவே மணல் கொள்ளையடிக்கப்பட்டு ராட்சத பள்ளங்களாக கிடந்த பாலாறு முழுவதுமாக மணல் படுகைகளால் நிரம்பியது. இது மணல் கொள்ளையர்களுக்கு தோதாக அமைந்தது.

இதனால் பாலாற்றில் மணல் கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது. இதில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றில் மணல் கொள்ளையர்கள் ஜல்லடை போட்டு ஜலித்து கொண்டுசெல்லும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதிகாலை நேரம் தொடங்கி காலை 8 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு வரையிலும் ஷிப்ட் முறையில் கதவுகள் மூடிய லோடு ஆட்டோவில் போக்குவரத்தில் நிற்கும் போலீசாரையும், ரோந்து போலீசாரையும் கடந்து மணல் கடத்தல் அமோகமாக நடப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். 
இரவு 10 மணி முதல் ஒரு கும்பல் டயர் வண்டிகளில் மணல் திருடி சென்று விற்பனை செய்கின்றனர். இப்போது டயர் வண்டி மணல் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மணல் மாஃபியாக்கள் வேலூரில் அதிகளவில் உலா வருகின்றனர். வருவாய்த்துறையினர் வருவாயை மட்டுமே பார்க்கின்றனர்.

கனிமவளத்துறையினர் எதைப்பற்றியும் க்ணடுகொள்வதே இல்லை. மாநகரில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பாலாற்றில் தெற்கு ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனை என்று மார்தட்டிக் கொள்ளும் சிஎம்சி மருத்துவமனை அங்கு தினமும் சேகரமாகும் கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியவற்றை பாலாற்றில் நேரடியாக பைப் லைன் அமைத்து வெளியேற்றுகிறது.

இதை தடுக்க எந்த அரசியல்கட்சியும் முன்வரவில்லை. சமூக ஆர்வலர்களும் முன்வரவில்லை. இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. இவ்வாறு வேலூர் பாலாற்றில் மணல் கொள்ளையடிக்கப்படுவதால் குடிநீருக்காக பாலாற்றில் அமைக்கப்பட்ட பைப்புகள் பூமிக்கு வெளியே எலும்புக்கூடாக உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. ரயில் பாலத்தின் கீழ் பள்ளம் தோண்டி மணல் சுரண்டுவதால் பாலம் வலுவிழந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

எனவே ஆற்றில் மணல் அள்ள சட்ட திட்டங்கள் வகுக்க வேண்டும். திருட்டு மணல் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் சாப்பிடும் மாஃபியாக்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.மணல் திருடப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சட்டம் போட்டு தடுத்து கொண்டே இருக்கிறது. ஆனால் திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. மணல் தட்டுப்பாட்டால் அதிகளவில் டயர் வண்டிகள் திருட்டு மணல் எடுத்து விற்பனை செய்வதை தொழிலாகமாற்றிக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஆட்சியர் ராமன் இரவு வலம் வந்தால் யார் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்பது நன்கு புலப்படும். 

இந்த நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர்மட்டத்தின் நிலை கேள்விக்குறியாக மாறிவிடும். குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் இனியாவது மணல்கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label