OUR CLIENTS
மாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்!
மாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்! Posted on 12-May-2017 மாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்!

வேலூர், மே. 12-
வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. இதை கண்டும் காணாமல் குறட்டை விடுகிறது மாநகராட்சி நிர்வாகம்.

வேலூர் மாநகரம் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு இன்னமும் நாகரிகம் தெரியாமல் ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை முறையை கழித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சிலரால்தான் வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில் நகரரையே நாற்றம் எடுக்கச் செய்துள்ளார் யாரோ புண்ணியவான் ஒருவர். தங்கள் வீடுகளில் வளர்க்க வேண்டிய கால்நடையான பசுமாடுகளை பயணிகள் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்கி நிற்க மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டித்தரப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

இதுஒருபுறம் என்றால் ஒருபுறம் டிஜிட்டல் பேனர்கள் இந்த பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. சித்தூர்&கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சங்கரன்பாளையம் பகுதியில்தான் இந்த நிழற்குடை அமைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் மாவட்ட உயரதிகாரிகள் கண்களில் இதுநாள் வரை இந்த நிழற்குடையின் அவலம் படவில்லையா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தனிநபர் ஒருவர் தைரியமாக மாட்டுத்தொழுவமாக பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவது கண்டிக்கதக்கது ஆகும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்தப்பகுதி வாழ் பொதுமக்களும் பல புகார்களை வேலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பியும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தை நாம் கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசத் தொடங்கி விடும்.

பக்கத்தில் குப்பை கொட்டி தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இப்படி பொது இடத்தில் வீடுபோன்று ஆக்கிரமிப்பு செய்ய யார் இந்த தனிநபருக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்தது என்பது புரியாத புதிராக உள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் விடுவதால்தான் தனிநபர்கள் மாநகராட்சி மீது தனியாக வழக்கு தொடர்ந்து நீதிமன்றங்களில் தனி வழக்காக வழக்காடி வருகின்றனர்.

இதுபோன்ற வாய்ப்புகளை மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியத்தால் மட்டுமே நடக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும். மாநகரராட்சி ஆணையராக உள்ள குமார் ÔபÕ வைட்டமின் வசூல் செய்வதிலேயே குறியாக இருக்கிறாரே தவிர நகர் வலம் வருவதே இல்லை. தேர்தல் நடந்து மேயர் கவுன்சிலர்கள் வருவதற்குள் ஒரு சுருட்டு சுருட்டி விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார். இவர் மெகா வசூல் வேட்டையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

குளிரூட்டப்பட்ட அறையை விட்டு வெளியில் வரவே மிகவும் சிரமப்படுகிறார் இந்த ஆணையர் குமார். இவர் அன்றாடம் என்னதான் வேலை செய்கிறார் என்று தெரியவில்லை. இவரது பணியை இவரால் செய்ய முடியாமல் போனது ஏன்? என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர் நாட்டு மக்கள் என்ன நிலையில் உள்ளனர், என்னென்ன அதிகாரதுஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன என்பதை பார்த்து நடவடிக்கை எடுப்பதே இல்லை.

மாநகரில் வைக்கப்படும் 99% டிஜிட்டல் பேனர்களுக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதே இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது, ஆனால் பலனில்லை என்பது வருந்ததக்கது.

இந்நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் சிலர் வந்து ரகசியமாக பேனர் வைத்துள்ளவர்களை அழைத்து 'ப' வைட்டமின் பெற்றுச் சென்று விடுகிறார்கள் என்று பொதுமக்கள் தரப்பில் பல புகார்கள் கூறப்படுகிறது. மாநகரில் காட்பாடி முதல் பாகாயம் வரை எந்தெந்த இடத்தில் என்னென்ன பேனர்கள் உள்ளன, அவை முன் அனுமதி பெற்றவையா? என்று ஒரு நாள் கூட ஆய்வு செய்து ஆணையர் குமார் நடவடிக்கை எடுத்ததே இல்லை.

தற்போது கோடையில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து கோடை வெப்பத்தை தணித்து வருகிறது. இந்நிலையில் பயணியர் நிழற்குடையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் காற்றின் வேகம் தாளாமல் கழற்றிக் கொண்டு விழுந்தால் சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி நிர்வாகம் முந்திக் கொண்டு மாநகரில் உள்ள அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மீண்டும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் வரும் முன் காக்கப்போகிறதா? இல்லை வந்த பின் பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியத்துடன் இருக்கப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label