OUR CLIENTS
தீபா பேரவை அ.தி.மு.க. தீபா அணியாக மாற்றம்... இரட்டை இலை சின்னத்தை பெற முடிவு!
தீபா பேரவை அ.தி.மு.க. தீபா அணியாக மாற்றம்... இரட்டை இலை சின்னத்தை பெற முடிவு! Posted on 13-May-2017 தீபா பேரவை அ.தி.மு.க. தீபா அணியாக மாற்றம்... இரட்டை இலை சின்னத்தை பெற முடிவு!

சென்னை, மே. 13-
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க.வையும் மீட்டெடுக்க வேண்டி தீபா பேரவையை அ.தி.மு.க. தீபா அணியாக மாற்ற வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறை சென்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.   இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இந்த 2 அணிகளும் கடும் போட்டியில் களம் இறங்கியுள்ளன. சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டோம் என்று எடப்பாடி அணியினர் கூறி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் தனித்து செயல்பட்டு வருகிறார்.

அவர் சசிகலா ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தீவிரம் காட்டியுள்ளார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ,  அ.தி.மு.க. தீபா அணியாக மாற்றப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தீபா பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆலோசனை கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. உயர் மட்ட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாண்டுரங்கன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பசும்பொன் பாண்டியன், செல்ல ராசாமணி, பண்ணை செந்தில்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரோகினி என்கிற கிருஷ்ண குமார், சரஸ்வதி, முன்னாள் எம்.பி.ராஜா பரமசிவம், ராமச்சந்திரன், கரூர் கருப்பசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம், மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\

கூட்டத்தில்   நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்;   முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா மறைவிற்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தலைவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து கழகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அம்மாவின் மறைவிற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க நூற்றாண்டு காலம் மக்களின் பேராதரவை பெற்று சிறப்பாக செயல்படுவதற்கான அம்மாவின் ரத்த வாரிசு இளைய புரட்சி தலைவி அம்மாவை லட்சக்கணக்கான தொண்டர்கள் அம்மாவை தலைவராக ஏற்று கொண்டு கழகத்திற்கு பொதுச் செயலாளராக தலைமை ஏற்று வழி நடத்திட வேண்டுகோள் விடுத்து வந்தோம்.

தொண்டர்கள் கருத்தறிந்து மக்களின் உணர்வுகளை தெரிந்து கொண்டு அம்மாவின் பிறந்த நாள் அன்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தீபா உருவாக்கினார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த தலைவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அ.தி.மு.க கழகத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் பறி கொடுத்து விட்டார்கள்.   ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இளைய புரட்சி தலைவி அம்மா போட்டியிட்டு மக்களின் பேராதரவை பெற்று அமோக வெற்றி பெற்று இரட்டை இலைக்கும் அ.தி.மு.க விற்கும் உரிமை கொண்டாட தகுதி வாய்ந்த மக்கள் தலைவி, இளைய புரட்சி தலைவி அம்மா தான் என்று நிரூபிக்க காத்திருந்தோம்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததால் ஆர்.கே நகர் இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டது. இனியும் காலம் கடத்தாமல் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க.வையும் மீட்டெடுக்க வேண்டி அ.தி.மு.க கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இளைய புரட்சி தலைவி அம்மா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை துணை அமைப்பாகவும் இனி அ.இ.அ.தி.மு.க (ஜெ.தீபா அணி) என்ற பெயரில் செயல்பட்டு தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க.வையும் மீட்டெடுத்து தங்கள் பொதுச்செயலாளராக தலைமை ஏற்று கழகத்தை வழி நடத்த வேண்டுமாய் இளைய புரட்சி தலைவி தீபாவை கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இந்த தீர்மானங்களை தீபா ஏற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் டெல்லி சென்று இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷனில் முறையிட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

Label