OUR CLIENTS
அரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி!
அரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி! Posted on 13-May-2017 அரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி!

வேலூர், மே. 13-
வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா, திமிரி ஒன்றியம், மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. விவசாயி இவரது மகன் மணிகண்டன்(23). இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். பிறவியில் இருந்தே இவர் மாற்றுத்திறனாளி ஆவார்.

இவர் தனது உடல் ஊனத்தை சுட்டிக் காண்பித்து முன்னாள் மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றிய ராஜேந்திரன், நந்தகோபால், தற்போதுள்ள ஆட்சியர் ராமன் ஆகியோரிடம் 3 சக்கர மோட்டார் வாகனம்  வேண்டி மனு அளித்திருந்தார். ஆனால் இதுநாள் வரை அவரை எந்த ஆட்சியரும் திரும்பி கூடபார்க்கவில்லையாம். அரசு பணியை மாவட்ட ஆட்சியர்கள் எப்படி கையாண்டுள்ளனர் என்பதற்கு மணிகண்டன் என்ற மாற்றுத்திறனாளியே ஒரு சிறந்த உதாரணம் ஆவார். 

இவர் தற்போது பிஎஸ்சி முடித்து விட்டு பி.எட்., படித்து வருகிறார். தனது உடல்நிலை சரியில்லை என்று வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை உள்ளே அழைத்துச் செல்ல தள்ளுவண்டியை தள்ளும் வார்டுபாய்கள் ஒவ்வொரு முறையும் தலா ரூ.100 கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் மணிகண்டன்.

இப்படி படித்து விட்டு வேலையின்றி தவிக்கும் மணிகண்டன் போன்றோர் கூட விதிவிலக்கல்ல. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பலர் ஏழைகள் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் அட்டை போல செயல்படுகின்றனர். இவர்களை மருத்துவத்துறை கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கையை அவர்கள் மீது எடுக்க முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகமும் அவ்வப்போது மக்கள் எந்த நிலையில் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்பதை அறிந்தும், அவர்கள் தேவையறிந்தும் செயலாற்ற வேண்டியது அரசின் கடமையாகும். 

மாற்றுத்திறனாளியான மணிகண்டன் மிகவும் கஷ்டப்படும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர். இவர் பலமுறை  3 சக்கர மோட்டார் வாகனம்  வேண்டி பலமுறை இதற்கு முன் இருந்த மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கபடவில்லை. தற்போதுள்ள ஆட்சியர் கருணை கொண்டு மணிகண்டனுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும்,  படித்த இளைஞனுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

வசதியற்றோர்தான் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர், ஆனால் சேவை செய்யவேண்டிய உன்னதமான இடத்தில் இருக்கும் மருத்துவமனை ஊழியர்களோ  இரக்கமற்ற முறையில் நடந்துகொள்வது  வன்மையாக கண்டிக்க தக்கது. மாற்றுதிறனாளி என்றும் பார்க்காமல் அவர்களிடமும் பணம் பறிக்கும் செயல் நடைபெறுகின்றது.

இதுபோன்றோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். படித்த மாற்றுதிறனாளியான மணிகண்டனுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம்  வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மணிகண்டனுடன் “காலச்சக்கரம்” வாசகர்களும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கின்றனர். 

Label