OUR CLIENTS
தில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு... 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை!
தில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு... 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை! Posted on 16-May-2017 தில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு... 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை!

புதுதில்லி, மே 16-
தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கற்பழிப்பில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரியானா மாநிலம் சோனிப்பட் பகுதியில் 23 வயது இளம்பெண் 8 பேரால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தில்லியில் நடந்தது போன்று அந்த சம்பவம் நடந்ததால் மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த பரபரப்பு ஓய்வதற்குள் தலைநகர் டெல்லியின் புறநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். அந்த இளம் பெண் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர். புறநகரான குர்கானில் 17-வது செக்டாரில் அவர் தங்கி இருந்து டெல்லியில் பணிபுரிந்து வருகிறார். சனிக்கிழமை இரவு அவர் தன் தோழியுடன் டெல்லி கன்னட் பிளேசில் உள்ள கடைகளுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு 2 மணிக்கு அவர் குர்கானுக்கு திரும்பினார். 17-வது செக்டாரில் உள்ள தன் வீடு அருகில் அவள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை 3 பேர் சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர்.

ஓடும் காரில் அந்த இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். 3 வாலிபர்களும் மாறி, மாறி அந்த பெண்ணை கற்பழித்தனர். சுமார் 3 மணி நேரம் அந்த இளம்பெண், 3 வாலிபர்களிடம் சிக்கி தவித்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள், அந்த பெண்ணை டெல்லி நசப்கர் பகுதியில் காரில் இருந்து ரோட்டோரத்தில் வீசினார்கள். பிறகு காரில் தப்பிச் சென்றுவிட்டனர். அந்த பெண், அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். இதையடுத்து டெல்லி போலீசார் குர்கான் போலீசாரை உஷார்படுத்தி தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

3 வாலிபர்களும் பேசிக் கொண்டதை வைத்து ஒரு வாலிபரின் பெயர் தீபக் என்று தெரியவந்துள்ளது. அவரை பற்றி போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 வாலிபர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

Label