OUR CLIENTS
தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...!
தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...! Posted on 16-May-2017 தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...!

வேலூர், மே 16-
வேலூரில் உள்ள காஞ்சி ஜவுளி நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இதை கேட்கும் அதிகாரிகளையும் “ப” வைட்டமின் கொடுத்து அவ்வப்போது சரிகட்டிவிடுகின்றனர் மிகவும் சாமர்த்தியமாக இந்த காஞ்சி ஜவுளி நிறுவனம். இதனால் பாதிப்பிற்குள்ளாவதோ அப்பாவி பொதுமக்கள் தான். இந்நிறுவனம் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது. முறையான பார்க்கிங் வசதியின்றி செயல்படுகின்றது.  அதனால் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்தை தடை செய்யும் பணியில் தோட்டப்பாளையத்தில் உள்ள காஞ்சி ஜவுளி நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. போக்குவரத்து பிரிவு போலீசார் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருகின்றனர்.

வேலூர்-காட்பாடி செல்லும் சாலையில் தோட்டப்பாளையம் அருகில் ஒரு காஞ்சி ஜவுளி நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு சரியான வாகன நிறுத்தும் இடம் இல்லை. அண்டர்கிரவுண்ட்டில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஓருவழிப்பாதையாக உள்ளது. இதனால் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக செயல்படுகிறது. இங்குள்ள தனியார் பாதுகாவலர்கள் ஒழுங்கான முறையில் இயங்கும் போக்குவரத்தை தடைபடுத்தி நிறுத்திவிட்டு ஜவுளி நிறுவனத்தில் அண்டர்கிரவுண்ட் பகுதியில் இருந்து வெளியில் வரும் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி தருகின்றனர்.

குறிப்பாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டு கடலூர் - சித்தூர் மெயின்ரோட்டையே சுருங்கச் செய்துவிட்டனர். இதனால் இந்த இடத்தில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது.  இவர்கள் அவ்வழியாக செல்லும் வாகனங்களை மடக்கி அவர்கள் பார்க்கிங் வசதி செய்வதால் சிஎம்சி மருத்துவமனை சிக்னல் வரையிலும்  மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவ்விடத்தை கடப்பதற்கோ மிகவும் சிரமப்படுகின்றனர். தனி நபர் வியாபாரத்திற்காக அப்பாவி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த காஞ்சி ஜவுளி நிறுவனத்தை கடந்துதான் பஸ் நிலையம், ரயில் நிலையம் செல்லவேண்டி இருப்பதால், அவசரமாக செல்பவர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.

காஞ்சி நிறுவனம் ரோட்டை ஆக்கிரமித்து பாதை அமைத்து வைத்துள்ளது. இதனால் மிகவும் குறுகிய அளவு அங்கு சாலை உள்ளது. இதனால்தான் அங்கு மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்ய மாநகராட்சி நகர் நல அலுவலர் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. வேலூர் போக்குவரத்து பிரிவு போலீசார் மாமூல் வாங்கிக் கொண்டு எதைப்பற்றியும் கண்டும் காணாதது போல கண்களை மூடிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு காரணம்  நாங்கள் அனைவருக்கும் மாமூல் கொடுத்து சரிகட்டி விடுகிறோம் என்று அந்த ஜவுளி நிறுவனம் கொக்கரிக்கிறது. இப்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட அரசு உயரதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்கு தெரியும். அத்தோடு இந்த வழியாகத்தான் அனைத்து அரசு அதிகாரிகளும் பயணிக்கின்றனர்.

பத்துக்குபத்து கடை வைத்துள்ளவர்கள் சாலையில் படிக்கட்டுகள் கட்டியிருக்கிறார்கள் என்று படிக்கட்டுகளை இடித்துவிட்டு செல்லும் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து தனி நிறுவனம் ஒன்று பாதை அமைத்துள்ளது இவர்களது கண்களுக்கு புலப்படவில்லையா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஏன்  இந்த பாரபட்சத்துடன் செயல்படுகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது. யார் இந்த கடைக்கு அளவில்லா அதிகாரம் வழங்கியது என்பது தெரியவில்லை. போக்குவரத்து பிரிவு போலீசார் இந்தபக்கமே தலை வைத்து கூட படுப்பதில்லை. பார்க்கிங் வசதி இல்லாமல் கடையை திறந்து வைத்து கொண்டு பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகின்றனர்.

தள்ளுவண்டியில் கொய்யா பழம் விற்கும் முதியவர் ஒருவர், அவ்வழியாக சாலையில் தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு செல்கிறார், அப்போது  காஞ்சி ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்யும் செக்யூரிட்டி நாயை விரட்டுவது போல் வேகமாகச் செல் என விரட்டுகின்றார். சாலை அவர்களுக்கு மட்டுமே சொந்தமா என்பதுதான் புரியவில்லை. அராஜகத்தில் உச்சகட்டமாக செயல்படுகின்றது இந்த காஞ்சி ஜவுளி நிறுவனம்.  அதேபோன்று அவ்வழியாக மெல்லச் சென்றால் அவர்களை வேகமாகச் செல் என்று அங்குள்ள பாதுகாவலர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களை விரட்டியடிக்கின்றனர். மேலும் இதுபோன்ற தொந்தரவுகள், சர்ச்சைகள் தினமும் இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. பூனைக்கு மணி கட்டுவது யார்? என இந்த பிரச்னை விசுவரூபம் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.

ஒருநாள் இந்த பிரச்னை வெடிக்கும். அப்போது பொதுமக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. சில பல ரௌடிகளை கைகளில் வைத்து கொண்டு கொட்டம் அடித்து வருகின்றனர் பிரபல ஜவுளி நிறுவனம். போக்குவரத்தை தடை செய்ய இவர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்தவர்கள் யார் என்பதுதான் இன்றைய கேள்வியாக வேலூர் மாநகர மக்களிடம் உள்ளது.

பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது. அதாவது நேஷனல் திரையரங்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்றால் பின்னாலேயே வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. இதற்கு காரணம் சாலை மிகவும் குறுகலானதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகள் முதல் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர், மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த கடை முன் போடப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து தடைபடாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுமட்டுமின்றி இந்த காஞ்சி ஜவுளி நிறுவனம் கட்டடம் தொடங்கிய முதல் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால் பல சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்டிஐ இக்கட்டத்தை பற்றி கேட்டறிந்ததில் முறையான மண்பரிசோதனை குறிப்பிடப்படவில்லை. எஸ்கிலேட்டர் பயன்படுத்தும்போது கட்டடம் அதிர்வு போன்ற பிரச்னைகள் தொடர்கதைதான். ஒரு முறை இந்த ஜவுளி நிறுவனத்தில் தீ பிடித்தது. அதை அணைப்பதற்கு குறைந்த பட்ச மண் வாளிகூட இல்லாதது வெட்கக்கேடான ஒன்று என்று கூறலாம்.  இதுபோன்று தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் இந்நிறுவனத்தின் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

குறைந்தபட்சம் போக்குவரத்தையாவது சரிசெய்து தருகின்றனரா அதிகாரிகள் அல்லது இச்செய்தியை காரணம் காட்டி பையை நிரப்பி கொள்வார்களா?  இதற்கு மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனில் அக்கரை கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர முன்வருகிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label