OUR CLIENTS
அரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்!
அரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்! Posted on 18-May-2017 அரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்!

வேலூர், மே 18-
தரவரிசை ரத்து தொடர்பான அரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் தரவரிசை பட்டியலுடன் மாணவர்கள் படத்துடன் விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். இதை மீண்டும் அரசு கண்டித்து செய்திகள் வெளியிட்டன, அச்செய்தியையும் அலட்சியம் செய்து பல பள்ளிகள் தரவரிசை பட்டியலுடன் நேற்றும் விளம்பரங்கள் செய்தன. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.  அரசாணையை அலட்சியம் செய்யும் பள்ளிகள் மீது ஏன் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர்.

 தரவரிசை ரத்து தொடர்பான அரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் விளம்பர பேனர்கள் வைத்துள்ளன. அதுமட்டுமன்றி அனைத்து பேனர்களும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது. அத்துமீறி அனுமதியின்றி இவர்கள் வைத்த விளம்பர பேனர்களால் அரசுக்கு வருவாய் இழப்பு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும்  இடங்களில்  விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஏன் இதுபோன்ற பேனர்கள் அதிகாரிகளின் கண்களில் படவில்லையா? எந்தவித துறைவாரியான நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? &என்பது பொதுமக்கள் தரப்பு கேள்விகளாக இன்று நம் முன் உள்ளன. தரவரிசை ரத்து தொடர்பான அரசாணையை மீறி விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவிலான தரவரிசை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்த 3 நாட்களில் அரசாணை மீறப்பட்டுள்ளது. அரசாணைகளை தனியார் பள்ளிகள் எந்த அளவுக்கு மதிக்கின்றன என்பதற்கு இதைவிட மிகச்  சிறந்த உதாரணம் வேறொன்றுமில்லை. ஒழுக்கத்தை போதிக்கவேண்டிய பள்ளிகளே இவ்வாறு முறைகேடான ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது. இதை காணும்போது பள்ளிகள் வியாபாரநோக்கமாக மட்டுமே செயல்படுகின்றன என்பதை வெட்டவெளிச்சமாக தெரிகின்றது. அதுமட்டுமன்றி இச்செயல் ஒன்றே தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் பாடம் கற்பிக்கும் முறை எவ்வாறு கடைபிடிக்கப்படும் என்பதையும் அம்பலப்படுத்துகிறது.

பள்ளிகளில் சீருடை, ஷூ போன்ற பொருட்களை விற்பதை அரசு தடை செய்தும் சில தனியார் பள்ளிகள் தொடர் விற்பனை செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால் அரசுக்கு சேரவேண்டிய வரி இரட்டிப்பு செய்யப்படுகின்றன. அதுமட்டுமன்றி பெற்றோர்களிடம் அதிக அளவில் விற்பனை செய்து கொழுத்த லாபம் பார்க்கின்றனர். இதனால் பெற்றோர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுபோன்று தொடர்ந்து அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவதே வேலையாக வைத்திருக்கின்றனர் இந்த தனியார் பள்ளிகள்.

பெற்றோர்களை ஏமாற்றுவதோடு நிறுத்தாமல் ஒரு படி மேலே சென்று அரசை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். அனைவருக்கும் அடிப்படை கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள்  25 சதவீதம் இடஒதுக்கீடு செய்து தரவேண்டும். ஆனால் தனியார் பள்ளிகளோ இடஒதுக்கீடு செய்து தராமல், ஒதுக்கீடு செய்ததாக மாணவர்கள் பெயர் பட்டியல் தயார்செய்து அரசிடம் கணக்கு காண்பித்து கொள்ளை அடிக்கின்றனர். இதில் ஏன் வெளிப்பாடு தன்மை இல்லை என்ற கேள்வியும் எழுப்புகின்றனர்.

25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும் என்ற விதிமுறை கடைபிடிக்கவேண்டும். அப்பொழுதுதான் தனியார் பள்ளிகளின் உண்மைத்தன்மை வெளிப்படும். இவ்வாறு தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் ஏதேனும் பிரச்னைகள் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுப்பதே அரசு அதிகாரிகளின் வேலையாக உள்ளது. பல பள்ளிகள்  போதிய இடவசதி, விளையாட்டு மைதானம், காற்றோட்டமின்மை  போன்ற பல அரசு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுகின்றன. அரசு வகுத்த பள்ளி கட்டணங்களுக்கு அதிகமாக வசூலிக்கின்றனர். இதை தட்டிக்கேட்டால் உடனடியாக குழந்தைகளின் டிசியை கொடுப்போம் என்றும், வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றும் மிரட்டும் தொணியில் பதிலளிக்கின்றனர் பள்ளி நிர்வாகிகள்.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களை தவிர்க்கும் வகையிலும் தரவரிசை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பல பள்ளிகள் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் நீங்கள் ஒழுங்காக பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை என்றும், டிசி வாங்கிச் சென்று விடுங்கள் என்றும், பெற்றோர்களை குறைகூறுகின்றனர். மாணவர்கள் படிக்கவில்லையென்றால் பள்ளி பொறுப்பேற்காது, பெற்றோர்கள்தான் பொறுப்பு என்பதை போல நடந்துகொள்கின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள்.

மனப்பாடம் செய்து வாந்தி எடுக்க வைப்பதே பல பள்ளிகளின் வேலையாக உள்ளது. மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்துகின்றன சில தனியார் பள்ளிகள். இப்படி தனியார் பள்ளிகள் செய்யும் அட்டூழியங்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இதுபோன்ற தனியார் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

பள்ளிக்கட்டணம் வசூலிப்பது மட்டுமன்றி டியூஷன் என்ற பெயரிலும் கொள்ளையடிக்கின்றன சில தனியார் பள்ளிகள். காலை முதல் மாலை வரை பள்ளியில் படிக்க வைக்கமுடியாததை, டியூஷனில் ஒரு மணி நேரத்தில்தான் மாணவர்களை தயார்படுத்துகின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

சிறந்த மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்பதை மறந்து பணம் பறிக்கும் கொள்ளை கூடாரமாக மாறிவருகின்றன தனியார் பள்ளிகள். இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். சில பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக் கட்டணம் கட்டத் தவறும் பட்சத்தில் மாணவர்களை வெளியில் அழைத்து, அனைத்து மாணவர்கள் முன்பும் அவமானப்படுத்தும் விதமாக நிற்க வைக்கின்றனர். இதனால் மாணவர்கள் மனம் உடைந்து வீட்டைவிட்டு ஓடிப்போன கதையும் பல உண்டு. ஆனால் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.

ஒயின்ஷாப் எடுத்து நடத்தும் அரசோ ஏன் தனியார் பள்ளிகளை எடுத்து நடத்த முன்வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தனியார் பள்ளிகளின் விதிமுறைகளை ஆய்வு  செய்து, முறையான 25 சதவீதம் அடிப்படை கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்கள் பயனடைய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் கல்வி என்பதால் இதற்கு தனி முக்கியத்துவம் கொடுத்து, தனியார் பள்ளிகள் 25 சதவீதம் அடிப்படை கல்வி சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்ய செய்யவேண்டும். கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் வாயிலாகத்தான்  தனியார் பள்ளிகள் ஒழுங்காகச் செயல்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அரசாணையை மீறி தரவரிசைப் பட்டியலுடன் விளம்பரம் செய்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். அரசாணையை அலட்சியப்படுத்திய பள்ளிகள் மீது விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க கல்வித்துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.

தனியார் பள்ளிகளின் அத்துமீறிய செயல்கள்...
1. அரசாணையை மீறி தரவரிசை பட்டியல்...
2. 25 சதவீதம் இடஒதுகீட்டில் முறைகேடு...
3. பள்ளிச் சீருடை, காலணிகள் போன்ற பொருட்களை விற்பனை செய்தல்... வரி ஏய்ப்பு செய்தல்...
4. வகுப்பில் அதிக மாணவர்கள¢ சேர்க்கை...
5. மாணவர்களை வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்தல...
6. அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதல்   கட்டணம் வசூலிப்பது...
7. பள்ளிக் கட்டணத்துக்கு ரசீது வழங்காமல் துண்டு சீட்டு வழங்குவது...
8. தட்டிக் கேட்கும் பெற்றோர்களிடம் டிசி வழங்குவதாக மிரட்டுதல்...
9. பள்ளிக் கட்டணம் தாமதமாகச் செலுத்தும் மாணவனை அனைவர் முன்பும் அவமானப்படுத்துதல்...
10. நன்கொடை புத்தகம் வழங்கி நன்கொடை வசூலிக்க செய்தல்...
11. மார்க் குறைவாக எடுத்தால் பெற்றோரை குறைகூறுவது உடனடியாக டிசி வழங்குது... இதனால் பிற பள்ளியிலும் சேரமுடியால் தற்கொலைக்கு முயலும் மாணவர்கள்....  பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகும்....

இதுபோன்று அரசாணையை மீறி செயல்படும் பள்ளிகளை “காலச்சக்கரம் நாளிதழ்” தோலுரித்து காட்டும் என்பதில் ஐயமில்லை....  பெற்றோர்கள் இதுகுறித்த தகவல்களை தெரிவிக்கலாம். சுயவிவரம் ரகசியம் காக்கப்படும்.

Label