OUR CLIENTS
கலெக்டர் உத்தரவை காற்றிலே பறக்கவிட்ட மாநகராட்சி ஆணையர்!
கலெக்டர் உத்தரவை காற்றிலே பறக்கவிட்ட மாநகராட்சி ஆணையர்! Posted on 18-May-2017 கலெக்டர் உத்தரவை காற்றிலே பறக்கவிட்ட மாநகராட்சி ஆணையர்!

வேலூர், மே 18-
வேலூர் என்றதும் அனைவரது நினைவுக்கு வருவது டிஜிட்டல் பேனர்கள்தான். மாநகரையே ஆக்கிரமித்த தனியார் பள்ளி டிஜிட்டல் பேனர்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வேலூர் மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வந்தது. மாநகராட்சி நிர்வாகம் ஆணையர் குமார் கைகளுக்கு வந்ததும்தான் தாமதம், பணிகள் ஏதும் நடக்கவில்லை. சுருட்டல் மட்டுமே ஜரூராக நடக்கிறது என்று மாநகர பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

அரசாணையை மீறி பல பள்ளிகள் விளம்பர பேனர்களை பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். அரசாணையை மீறி மட்டும் பேனர்கள் வைக்கவில்லை பேனர்வைக்கும் சட்ட விதிக்கும் மீறி  மாநகராட்சி  கட்டணம் ஏதுமின்றி பல நாட்களாக விதிமுறை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பேனர்கள் கட்ட ஏதுவாக அவர்கள் பயன்படுத்துவது பயணியர் நிழற்குடைதான். இதனால பயணியர் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்குதலால் பாதிக்கப் படுகின்றனர். சங்கரன் பாளையம் பஸ்நிலையத்தில் உள்ள பயணியர் நிழற்குடையில் கட்டப்பட்ட பேனரால் பொதுமக்கள் நிழற்குடையில் நிற்காமல் வெளியில் நிற்கின்றனர். இந்த பேனரால் உள்ள நுழைய முடியவில்லை, உள்ளே நின்றாலும் பஸ் வருவதை பார்க்க இயலவில்லை, அதனால்  வெயிலில் வெளியே நிற்கின்றோம் என்கின்றனர் அங்கிருந்த பொதுமக்கள்.

இந்நிலையில், மாநகராட்சிக்கு முறையாக பணம் செலுத்தி நிழற்குடையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மறைக்கப்படுகின்றன. இதனால் முறையாக பணம் செலுத்தி விளம்பரம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற முறையற்ற பேனர்கள், மாநகர புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாகாயம் வரையில் டிஜிட்டல் பேனர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதற்கு காரணம் மாநகராட்சி ஆணையர் குமார், நகர் நல அலுவலர் ஆகியோர் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதை டிஜிட்டலர் பேனர் வைக்கும் நபர்களே முன் வந்து சொல்லுகின்றனர்.

ஒரு பேனரிலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தியதற்கான ரசீது இணைக்கப்படவில்லை. இதுபோன்ற அனுமதி பெறாத பேனர்கள் வைக்க மாநகராட்சி எப்படி அனுமதி அளிக்கிறது என்பது இப்போது தெள்ளத்தெளிவாக புரிகிறது. இதற்கு மூல காரணமே  டிஜிட்டல் பேனர் டிசைனிங் செய்பவர்கள்தான். மாநகராட்சி உத்தரவு இல்லாமல் டிஜிட்டல் பேனர்களை தயாரிக்க கூடாது என்று டிசைன் கடைக்கார்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் ராமன் ஆரம்பம் முதல் அனைத்து பிரச்னைகளுக்கும் முறையான ஆய்வு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தி உத்தரவு பிறப்பித்து வருகிறார். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அவ்வப்போது உரிய ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்துவருகிறார். அண்மையில் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆலோசனை கூட்டம் நடத்தி நகரில் அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் செயல்பட வேண்டிய அதிகாரிகளோ மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர். இதற்கு உதாரணமாக மாநகராட்சி ஆணையர்  மாவட்ட ஆட்சியர் உத்தரவை   காற்றிலே பறக்கவிட்டு விட்டு செயல்படுகின்றனர் என்பதை ஆக்கிரமித்த பேனர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுபோன்று உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 'காலச்சக்கரம்' வாசகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் இப்போது,  கலெக்டர் உத்தரவோ காற்றிலே பறக்குது. யார் என்ன சொன்னாலும் 'ப' வைட்டமினை பெற்றுக் கொண்டு என்னமாய் வேலை பார்க்கிறார்கள் மாநகராட்சி அலுவலர்கள் என்பது தெரியவந்துள்ளது. இப்படியே முறைகேடாக செயல்பட வழிவகுப்போர் மீது ஏன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது.

பேனர்களை விரைவில் அகற்றி நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள வழிவகுக்க வேண்டும். முறையான கட்டணம் செலுத்தி குறிபிட்ட இடத்தில் மட்டுமே பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும்  என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

Label