OUR CLIENTS
மாங்காய்மாலை செய்யும் முறை!
மாங்காய்மாலை செய்யும் முறை! Posted on 18-May-2017 மாங்காய்மாலை செய்யும் முறை!

திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது  பட்டுபுடவை அணிந்து கொள்ளவே ஆசைபடுவார்கள். அப்படிபட்ட உடையணியும் போது அதற்கு பொருத்தமாக நகை அணிந்தால் எல்லோர் கவனமும் நம் பக்கம்தான். அந்த வகையில் கவனம் ஈர்க்கும் வகையில்  மாங்காய் மாலையை  நீங்களே செய்து அணிந்து கொள்ளலாம்.

அணிமணிகள் விற்கும் கடைகளில் மாங்காய் மாலை கோர்க்கப்படாமல் செட்டாகக் கிடைக்கும்.  அதை வாங்கி நம் கற்பனைத் திறனுக்கேற்ப, மணிகள் வைத்தோ வெறும் மோடிஃப்களை கோர்த்தோ மாலையாக மாற்றலாம்.  இந்த செட்டோடு தோடுகள் வரும் என்பதால் நாம் கோர்க்கத் தேவையில்லை. 

இதில் பெரிதாக வேலையில்லை என்றாலும் இப்படி கோர்க்கப்படாமல் வாங்குவதற்கும் செய்த நகைகளை செட்டாக வாங்குவதற்கும் குறைந்தது 500 ரூபாய்  முதல் 1000 ரூபாய் அளவுக்கு விலை வித்தியாசம் இருக்கும்.  

நீங்களே கோர்க்கும்போது பணம் மிச்சமாவதோடு  உங்களுக்கு வேண்டிய நீளத்திற்கு விரும்பும் மாடலில் செய்துகொள்ளலாம். விருந்தாளிகள் முன்னால் நீங்கள் செய்த நகைகளை அணியும்போது, அவர்கள் அழகை பாராட்டும்போது  மனதில் சந்தோசம் துள்ளல்போடும் .

செய்முறைக்கு தேவைபொருட்கள்: 
மாங்காய் மாலை செட்,  (கோர்க்கப்படாத மாங்காய் மோடிஃப்கள், தோடு அடங்கிய செட்), கம்பிகள்,  பேசர் பீட்கள், நூல் இணைப்பான்.

செய்முறை விளக்கம் :
இந்த செட்டோடு இணைப்பதற்கு ஏற்ற கம்பிகள் பொருந்திய இரண்டு மாங்காய் மோடிஃகள் வந்திருக்கும். அதில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். முழம் நீளத்துக்கு கம்பிகளை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இணைப்புள்ள மாங்காய் மோடிஃபின் இருதுளைகளில் கம்பியை விட்டு சரிசமமாக இழுங்கள்.

இணைப்பான் உள்ள மாங்காய் மோடிஃபுக்கு அடுத்து தனித்தனியாக உள்ள மாங்காய் மோடிஃப்களை இரு துளைகளின் வழியாக இரு கம்பிகளையும் விட்டு வரிசையாக நெருக்கிக் கோர்த்துக் கொள்ளுங்கள் .நடுவில் வரும் கொத்து மாங்காய் மோடிஃபை கோர்த்து அதற்கு அடுத்து தனித்தனி மாங்காய்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். 

இறுதியாக, இணைப்பு வைத்த மற்றொரு மாங்காயை கோர்த்து முடிச்சுப்போட வேண்டும். கம்பியின் முனைகளில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, கோர்த்த கம்பி முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள். மீதமுள்ள கம்பியை வெட்டி சீர் செய்யுங்கள்.

இருபுறமும் கம்பி வைத்த மாங்காய் மோடிஃபிக்குள் இதோ இப்படி பட்டு நூல் இணைப்பான்களைக் கோர்த்தால் மாங்காய் மாலை அணிந்துகொள்ள தயார்! 

மாங்காய் மாலை தயாரான நிலையில் நீங்கள் இந்த மாலையை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீளம் அளவு வைத்து செய்து, வீட்டில் இருந்தபடியே 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

Label