OUR CLIENTS
‘ஓபிஓஆர்’ சாலை திட்டம்... இலங்கைக்கு கூடுதலாக 1.5லட்சம் கோடி கடன்!
‘ஓபிஓஆர்’ சாலை திட்டம்... இலங்கைக்கு கூடுதலாக 1.5லட்சம் கோடி கடன்! Posted on 19-May-2017 ‘ஓபிஓஆர்’ சாலை திட்டம்... இலங்கைக்கு கூடுதலாக 1.5லட்சம் கோடி கடன்!

பெய்ஜிங், மே 19-
‘ஓபிஓஆர்’ சாலை திட்டத்தில் பங்குபெறும் இலங்கைக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவை மையமாக கொண்டு புதிய பொருளாதார சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ‘ஓபிஓஆர்’ எனப்படும் ‘ஒரு பட்டை, ஒரு சாலை’ திட்டத்தின் கீழ், ஆசியாவில் முதல் ஐரோப்பிய நாடுகள் வரை கடல் மற்றும் சாலை வழி திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகள் ஒன்றிணைக்கப்படும். இதுதொடர்பாக 29 நாட்டு தலைவர்கள் பங்குபெற்ற கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது.

இதில் ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் பங்குபெற்றனர். அப்போது சீனா-பாகிஸ்தான் பொருளாதார சாலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் புதிய பொருளாதார சாலை திட்டத்தில் பங்குபெறும் வகையில் இலங்கையுடன் தனிப்பட்ட முறையில் சீனா பேச்சுவார்த்தை நடத்தியது.

சீனாவின் சாலை திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. எனவே இலங்கையை தங்கள் வசம் வைக்க அதிக கடன் வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. சீனா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு ரூ.51 ஆயிரம் கோடியை சீனா கடனாக வழங்கி உள்ளது. தற்போது மேலும் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த தகவலை இலங்கை சிறப்பு திட்ட அமைச்சர் சரத் அமானுகாமா உறுதிப்படுத்தினார். மேலும் சீனாவின் பொருளாதார சாலை திட்டத்தில் பங்குபெறும் அத்தனை நாடுகளுக்கும் கூடுதல் கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக துறைமுக பகுதியில் குறிப்பிட்ட நிலத்தை சீனாவுக்கு 99 வருடம் குத்தகைக்கு வழங்கும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சரத் அமானுகாமா தெரிவித்தார்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார சாலை அமைக்க தற்போது கூடுதலாக ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்க சீனா முடிவு செய்துள்ளது. இது ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதையும் மீறி தொடர்ந்து சீனா தனது பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

Label