OUR CLIENTS
நேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி!
நேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி! Posted on 19-May-2017 நேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி!

வேலூர், மே 19-
வேலூரில் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் போலி எலக்ட்ரானிக் தராசுகளை பயன்படுத்தி நுகர்வோரை நூதன முறையில் ஏமாற்றி பட்டப்பகலில் மோசடியில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகளில் பயன்படுத்தப்படும் எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளில் ஒரு கிலோவுக்கு காய்கறிகள் வாங்கினால் 650 கிராம் எடையளவு பொருள்தான் உள்ளது. இது பட்டப்பகலில் மார்க்கெட்டில் நடைபெறும் மோசடியாகும். இதை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடையளவு குறைவாக உள்ளது பல நுகர்வோருக்கு தெரியாது.

கண்களை மூடிக் கொண்டு பொருட்களை நுகர்வோர் வாங்கிச் செல்பவர்கள் இந்த எடையளவு மோசடியை உணர்ந்தபாடில்லை. இதற்கு காரணம் நம்பிக்கையாக பொருட்களை ஆண்டாண்டு காலமாக வாங்கிச் செல்வதுதான் அவர்களுக்கு தெரிந்தது.

ஆனால் இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் நுகர்வோர் கண்களில் மண்ணை தூவி எடை குறைவான பொருட்களை விற்பனை செய்து விடுகின்றனர். எடைகள் அரசு முத்திரை வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளது அந்த எடைக்கற்களை பார்த்தாலே தெரிந்து விடும். இதேபோன்று போலி எலக்ட்ரானிக் தராசுகள் கையாளப்படுகின்றன.

இப்படி பல தில்லுமுல்லுகள் இந்த நேதாஜி மார்க்கெட்டில் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து பல முறை புகார் மனுக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தகவல்கள் இல்லை. குறிப்பாக சுத்தமின்றி மிகவும் அறுவெருக்கத்தக்க வகையில் மார்க்கெட் இயக்கப்படுகிறது.

இந்த தூய்மையை ஏற்படுத்த வேண்டிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என யாராக இருந்தாலும் நாளொன்றுக்கு தலா ரூ.20 அல்லது ரூ.10 கொடுத்தால் மட்டுமே அந்த கடையருகில் சேகரமாகியுள்ள அழுகிய காய்கனிகளை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ள இந்த மர்க்கெட்டில் வசூலாகும் பணத்தை யார் யார் பங்கு பிரித்து கொள்கின்றனர் என்ற ரகசியம் மட்டும் சிதம்பர ரகசியம் போல் கட்டி காக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட்டுக்கு சென்றால் மலர்கள், காய்கனிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. ஒருபுறம் தொற்றுநோய்கள் வேகமாக பரவுகின்றன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சுகாதாரம் கிலோ என்ன விலை என்பது போல இங்குள்ள வியாபாரிகள் கேள்வி கேட்கின்றனர். தொழிலாளர் ஆய்வாளர் இந்த நேதாஜி மார்க்கெட்டில் ஆய்வு நடத்தி எடை மோசடியில் ஈடுபடும் திருட்டு கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பணத்தை கொடுத்து வாங்கும் பொருட்களில் எடை மோசடி என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

அரசு அதிகாரிகள் முதல் தினக்கூலி வேலை செய்பவர்கள் வரை தினமும் நாடுவது நேதாஜி மார்க்கெட்டைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் அங்கேயே மோசடி தலைவிரித்தாடுவது கண்டிக்கத்தக்கது ஆகும். மாவட்ட நிர்வாகமும் இந்த நேதாஜி மார்க்கெட்டில் நடைபெறும் முறைகேடுகளை நிரந்தரமாக களைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்று கண்களை திறந்து கொண்டிருக்கும் போதே நூதன மோசடியில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க தயக்கம் காட்டக் கூடாது. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையையும், தொழிலாளர் ஆய்வாளரின் நடவடிக்கையையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

Label