OUR CLIENTS
தரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி!
தரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி! Posted on 19-May-2017 தரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி!

வேலூர், மே 19-
அரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் தரவரிசைபட்டியல் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு வெளியிடப்படும் தரவரிசை பட்டியலிலும் மதிப்பெண் கூட்டி தரவரிசை வெளியிடுகின்றனர்.

அரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் தரவரிசைபட்டியல் வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து பள்ளிகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டால், ஆமாம் எங்களுக்கு அரசாணை வந்தது, அதற்கு என்ன பண்ணலாம் என்று தெனாவட்டுடன் கேள்வி எழுப்புகின்றனர். 

இது குறித்து ஒரு பள்ளியில் கூறியதாவது: பிற பள்ளிகள் தரவரிசை பட்டியல் வெளியிட்டனர், அதனால் நாங்களும் வெளியிட்டோம். நாங்கள் உண்மையான மதிப்பெண் தரவரிசை பட்டியலைத்தான் வெளியிட்டோம். ஆனால் பிறபள்ளிகள் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் 10 முதல் 30 மதிப்பெண்கள் வரை மிகைப்படுத்தி தரவரிசை பட்டியல் வெளியிட்டு விளம்பரப் படுத்துகின்றனர். அரசாணையை மீறினால் என்ன என்பதைப்போல் பதிலளித்தார். இவ்வாறு அரசாணையை மதிக்காமல் மீறி செயல்படுபவர்கள் மீது கல்வித்துறை ஏன் மவுனம் காக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள்,  நாங்கள் அவர்களுக்கு கொட்டி கொடுத்துள்ளோம் அவர்கள் எந்த அடிப்படையில் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என ஏக போகமாக கூறுகிறார்கள். 

வேலூர் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் படிப்பை தவிர மற்ற செயல்களில் ஈடுபாடும், அக்கரையும் செலுத்துகின்றனர். குறிப்பாக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடந்தால் வேலூர் மாவட்டம்தான் அதிகளவில் ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டம் என்ற தனிச்சிறப்பை பெறுகிறது. 

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் காட்பாடிதான் மாவட்டத்தின் இதயம் போல செயல்படுகிறது.  அரசாணையை மீறி தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது காட்பாடியில் இயங்கும் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. அதுமட்டுமின்றி மாணவர்களிடம் ஒவ்வொரு கல்வியாண்டிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சன்பீம் பள்ளி தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து ஆண்டுதோறும் அட்மிஷன் செய்கிறது. இதே போன்று முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் பரிசுத்தொகை கேட்டு பள்ளி நிர்வாகத்தை அணுகினால் மிரட்டல் விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே நிலவுகிறது. 

இது குறித்து உண்மைதன்மையை பள்ளி தாளாளர் ஹரிகோபாலானிடம் விளக்கம் கேட்க செய்தியாளர்கள் சென்றால் பார்க்க விடாமல் செய்வதை இந்த சன்பீம் பள்ளியில் பணியாற்றும் ஒரு கும்பல் கனகச்சிதமாக செய்து வருகிறது. 

விளம்பரங்களை நாளிதழ்களில் தங்கள் விருப்பம்போல கொடுத்து விட்டு செயல்பாட்டையும் தாங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ளது போன்று நடைமுறைப்படுத்தி வருகின்றது இந்த சன்பீம் பள்ளி. இப்படி பள்ளிகளை நடத்துவதற்கு அரசியல் சாயமும் ஒருபுறம் பூசப்படுகிறது. அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்படுகிறது. பள்ளி நிர்வாகங்கள் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தவே இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் இலக்கை அடையும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இறுதியில் கிடைப்பது என்னமோ ஏமாற்றம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சன்பீம் பள்ளி அரசாணையை அலட்சியம் செய்து தரவரிசை பட்டியல் வெளியிடுகின்றது. 

மாணவர்கள் எடுத்த மதிப்பையும் அதிகப்படுத்தி பட்டியல் வெளியிடுவதாகவும் மற்றொரு பள்ளியை சேர்ந்தவர்கள் குறை கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் ஒரு மாணவனை விளையாட்டு மைதானத்தை சுற்றிவரச் சொல்லி அந்த மாணவனுக்கு நேர்ந்த துயரத்தை என்னவென்று சொல்வது. பஸ் கட்டணமோ கொள்ளைமேல் கொள்ளை, பஸ் ரிப்பேர் செய்வதற்குகூட பெற்றோர்களிடமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் விளம்பரமோ உண்மைக்கு புறம்பாகவே உள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் இப்பள்ளி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விசாரித்ததில் அதிகாரிக்கு கனிசமான ஒரு பெருந்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது என அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.  கல்வித்துறை அதிகாரியின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்துதான் அவர் கனிசமான தொகை வாங்கினாரா இல்லையா என்பது புலப்படும். இந்த ஆண்டு உணவு வழங்குவதாக கூறி கொள்ளையடிக்க திட்டம் போடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். 

பள்ளிகளின் விளம்பரத்தில் கூறுவது உண்மைத்தன்மையா என்பது பல பெற்றோர்களுக்கு தெரியாது. பெற்றோர்கள்தான் முதலில் விழிப்புணர்வு அடைய வேண்டும். பின்னர் தங்களது பிள்ளைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். தரமான அரசுப் பள்ளிகள், தகுதியான, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தாலும் நாம் நாடிச் செல்வது இதுபோன்ற தனியார் பள்ளிகளைத்தான். இதுபோன்ற மனநிலையில் இருந்து பெற்றோர்கள் மெல்ல மெல்ல வெளியில் வர வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் சிறிது சிறிதாக வர முயற்சிக்க வேண்டும்.  குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தனியார் பள்ளிகள் சேர்க்கை விஷயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளன. பின்னர் அவர்கள் விருப்பம் போல செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். அரசு இதுபோன்ற டுபாக்கூர் பள்ளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். 

கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பெற்றோர்களை Ôகாலச்சக்கரம்Õ நாளிதழ் கேட்டுக் கொள்கிறது.. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இதுபோன்ற பள்ளிகள் மீது கடும் எடுக்க முன்வர வேண்டும். இல்லையேல் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. மாணவர்கள் இதுபோன்ற பணவெறியர்களிடம் சிக்குண்டு சின்னாபின்னமாவதையும் யாராலும் தடுக்க முடியாது. மாவட்ட நிர்வாகம் என்னதான் நடவடிக்கையை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label