OUR CLIENTS
புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்... எதிர்க்கும் நிலையில் இல்லையென முதல்வர் பேச்சு!
புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்... எதிர்க்கும் நிலையில் இல்லையென முதல்வர் பேச்சு! Posted on 19-May-2017 புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்... எதிர்க்கும் நிலையில் இல்லையென முதல்வர் பேச்சு!

புதுச்சேரி, மே 19-
புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.

மத்திய அரசு, நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதற்கு முன்பாக, அனைத்து மாநில சட்டசபையிலும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதாவின் சட்ட முன்வரைவை முதல்வர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார்.

அதன் மீது, தி.மு.க., எம்.எல்.ஏ., சிவா, முதல்வரின் பாராளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி (காங்.,), அரசு கொறடா அனந்தராமன், கீதா ஆனந்தன் (தி.மு.க.,) அன்பழகன் (அ.தி.மு.க.,), ஜெயபால் (என்.ஆர்.காங்.,) ஆகியோர் விவாதித்தனர். எம்.எல்.ஏ.,க்களின் விவாதத்திற்குப் பின், முதல்வர் நாராயணசாமி பதிலளித்து பேசியதாவது:

நாடு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே விதமான வரியை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக சரக்கு, சேவை வரி சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். ஐந்து முதல் 40 சதவீதம் வரை ஐந்து விதமான வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் தலைமையில், வரியை அமல்படுத்த அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருப்பதால் மாநிலமாக கருத வேண்டும் என்று குரல் கொடுத்தோம். இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. முதன்முதலாக ஒரு படி நாம் உயர்ந்துள்ளோம்.

இந்த வரியினால் நுகர்வோர் மாநிலங்களுக்கு பாதிப்பா... உற்பத்தி மாநிலங்களுக்கு பாதிப்பா... என பெரிய விவாதம் நடந்து வருகிறது. இருப்பினும் நடைமுறைப்படுத்தும் போதுதான் அதில் ஏற்படும் சாதக, பாதகங்கள் தெரியும். பாதகம் ஏற்படும்போது அதற்கு தீர்வு காண்போம். நமது மாநிலத்தில் சரக்கு, சேவை வரிக்காக வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். 80 சதவீத வியாபாரிகள் சரக்கு சேவை வரிக்கு மாறிவிட்டனர். இதனால் ஏற்படும் இழப்பீட்டை 6 மாதத்திற்கு ஒரு முறை தருவதாக மத்திய அரசு கூறியது. 2 மாதத்திற்கு ஒருமுறை இழப்பீடு வழங்க கோரியுள்ளோம். மத்திய அரசின் வரி விதிப்பை நாம் எதிர்க்கும் நிலையில் இல்லை, ஏற்கும் நிலையில் உள்ளோம். அதேநேரத்தில் மாநிலத்தின் வருவாயை பெருக்க நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய வரி விதிப்பால் தொழிற்சாலைகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியை தேடி வரவேண்டிய தொழிற்சாலைகள் வரும். எனவே, சட்டத்தை உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் வைத்திலிங்கம் குரல் வாக்கெடுப்பு நடத்தி, சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

Label