OUR CLIENTS
திறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!
திறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி! Posted on 17-May-2017 திறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!

வேலூர், மே 17-
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திறந்தவெளி பாராக மாறி வரும் அவலம் தொடருகிறது. காவல் துறையும், கல்வித்துறையும் கண்டும் காணாமல் குறட்டை விட்டு வருகிறது. இதன் பின்னர் பல்வேறு மர்மங்கள் அடங்கி இருப்பதாக காட்பாடி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்த சுற்றுச்சுவர் பலமுறை கட்டப்பட்ட நிலையிலும் அதை உடனடியாக உடைத்து விடுகின்றனர் அந்தப்பகுதியில் சுற்றித்திரியும் வேலையில்லா ரௌடிகள்.  இந்த மர்மநபர்கள் அந்த பகுதியில் உலா வருகின்றனர். போலீசாரால் தேடப்படும் கேடிகள், ஜேப்படி திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்கள், செயின் அறுக்கும் திருடர்கள், வீடுகளின் பூட்டை உடைத்து திருடுபவர்கள் இங்குதான் ஒதுங்குகின்றனர். 

ஆனால் போலீசார் இரவு ரோந்து செல்லாததால் இவர்கள் தப்பித்து கொள்கின்றனர். யார் இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் காட்பாடி பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் நபர்கள்தான் என தெரிய வந்துள்ளது. காட்பாடி பகுதியை  சேர்ந்த கிரிமினல்கள்தான் இங்கு சங்கமமாகிறார்கள்.

காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு  உள்ளே சென்று பார்த்தால் பார்த்தவுடன் மிகவும் மனமுடைந்து அதிர்ந்து போகும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது பட்டப்பகலில் என்று சொன்னால் அது மிகையாகாது. வேலூர் மாவட்டம் எப்பொழுதும் கல்வியில் பின்தங்கி உள்ளது ஏன் என புரிந்துவிடும். பள்ளிக்கு தெற்கு புறத்தில் மைதானம் உள்ளது.

அந்த மைதானத்தில் தினமும் பகலில் மது அருந்துபவர்களுக்கு திறந்தவெளி பாராகவும் சூதாடுபவர்களுக்கு சூதாட்ட கிளப் ஆகவும், இரவில் விபச்சார விடுதியாகவும் இந்த மைதானம் செயல்பட்டு வருகிறது.  சித்தூர் பகுதியில் இருந்து சிகப்பு விளக்கு சிங்காரிகள் இந்த பகுதியில் இரவு 8 மணி முதல் டென்ட் அடித்து அமர்ந்து விடுகின்றனர். விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. ரூ.200 கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி இளைய சமுதாயம் சீரழிய வழிவகுக்கிறது. சில போலீசாருக்கு இது தெரிந்தும் நமக்கு வரும் மாமூலை நாம் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும் என்று அமைதி காக்கின்றனர். இரவு ரோந்து என்று எழுதி விட்டு காவல்  நிலையத்தில் கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்து விட்டு நிம்மதியாக தூங்கி விட்டு காலை எழுந்து வீட்டுக்கு செல்கின்றனர் இரவு ரோந்து காவலர்கள். நிலைமை இப்படி தலைகீழாக உள்ளது. அனைத்தும் பெயரளவில் மட்டுமே காட்பாடியில் நடக்கிறது. 

கண்மூடி கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் உடன் கண் திறந்து பார்க்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு இரவு காவலர்களை கட்டாயம் பணியமர்த்த வேண்டும். இரவில் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாத நிலையும், மிக சிரமமாக உள்ளதாகவும் அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இன்றி அந்தமக்கள் அதை தட்டிக் கேட்கச் சென்றால் அங்குள்ளவர்கள் கையில் பயங்கர ஆயுதங் கள் வைத்திருப்பதால் நமக்கு ஏன் வம்பு என தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். காட்பாடி காவல் ஆய்வாளர், கல்வித்துறை மனது வைத்தால் மட்டுமே இதுபோன்ற சமூக விரோதிகளை கூண்டோடு வேரறுக்க முடியும்.

இது பள்ளி கூடமா? பள்ளியறை கூடமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக மாறிவருகிறது. இத்தகைய சமூகவிரோதிகளை கூண்டோடு கைது செய்ய காவல் துறை தயங்க காரணமே காட்பாடி காவல் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள்தான் காரணம் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். காவல் துறையும், கல்வித்துறையும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இல்லையெனில் எருமை மீது மழை பெய்ததுபோல அமைதி காக்கப் போகிறதா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

Label