OUR CLIENTS
கோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை!
கோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை! Posted on 19-May-2017 கோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை!

வேலூர், மே 17-
வேலூர் மாநகராட்சி காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிக்குப்பத்தில் ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீபொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புஷ்ப பல்லக்கு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு வீட்டுக்கு வீடு வரி என்று எழுதப்படாத சட்டம் போட்டு, சொந்த வீடாக இருந்தால் தலா ரூ.600ம், வாடகை வீடாக இருந்தால் தலா ரூ.300ம் அடாவடியாக வசூலித்தனர். பள்ளிக்குப்பம் கிராமத்தில் வசூல் செய்ய வேண்டியதை வள்ளிமலை ரோட்டிலும், ஆவாரங்காடு பகுதியிலும் அடாவடியாக வசூல் செய்கின்றனர். இந்த ஆண்டு இதே அடாவடி வசூல் வேட்டை தொடர்கிறது. இந்த ஆண்டு சொந்த வீடாக இருந்தால் தலா ரூ.700ம், வாடகை வீடாக இருந்தால் தலா ரூ.400ம் கொடுக்க வேண்டுமாம்.

இதற்காக நோட்டீஸ் அச்சடித்து கொண்டு வீடு வீடாக வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவோர் செலவு செய்யாமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் கூட அடாவடி வசூல் வேட்டை நடத்துகின்றனர் என்று புகார்கள் வருகின்றன. இதில் வீண்கலகம் செய்பவர்கள் விஏஓ மூலம் போலீஸ் வசம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பு இடம் பெற்றுள்ளது அந்த அழைப்பிதழில் என்பது குறிப்பிடத்தக்கது. அழைப்பிதழின் பின்பக்கம் 2014&2015ம் ஆண்டு வரவு செலவு கணக்கு இடம்பெற்றுள்ளது.

இதை பல குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒன்றும் செய்ய முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இதுபோன்று வீடுகளுக்கு கோயில் பெயரைச் சொல்லி வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும். யாரையும் கட்டாயப்படுத்தி வசூல் வேட்டை நடத்தக்கூடாது என்று சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அது தெரியாமல் வசூல் வேட்டை படுஜோராக இந்த பகுதியில் நடைபெறுகிறது. வெளியூர்காரர்கள் என்றால் பள்ளிக்குப்பத்தை வைத்துதான் நீ பிழைப்பு நடத்துகிறாய் என்று மறைமுகமாக மிரட்டல் வேறு விடுகிறார்களாம்.

ஆனால் பொதுமக்கள் தலையில் வரி என்ற பெயரில் செலவை திணிக்கின்றனர். கோயில் விழாவை நடத்த இதுதான் வழியா? என்று பலர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற அடாவடி வசூல் வேட்டையை காட்பாடி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற அடாவடி வசூல் வேட்டையை தடுக்கவும், வசூலிப்போரிடம் தகுந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அனுப்ப ஏற்பாடுகளை செய்ய முன்வர வேண்டும்.

இதற்கு பிறகும் வசூல் வேட்டை தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முன்வர வேண்டும் என்பதுதான் இந்தப்பகுதிவாழ் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

இதுபோன்று கோயில் பெயரை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வசூல் வேட்டை நடத்துவது இந்த ஆண்டுடன் நிறுத்தி கொள்ள நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட ஆட்சியர் ராமன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற தேவையற்ற முரண்பாடான வசூல் வேட்டையை தடுத்து நிறுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label