OUR CLIENTS
ஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்!
ஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்! Posted on 15-May-2017 ஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்!

வேலூர், மே 15-
வேலூரில் உள்ள ஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி பாலிதீன் பைகளில் அடைத்து நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம் தொடருகிறது.

வேலூர் நகரில் பல பழைய மற்றும் புதிய ஜவுளி கடைகள் உள்ளன. ஆனால் இன்றைய போட்டி உலகில் சமாளித்து விற்பனை செய்ய முடியாமல் பல ஜவுளி கடைகள் திணறுகின்றன. தற்போது வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்தியை கையாண்டு வருகிறது.

இதன் வெளிப்பாடுதான் தற்போது வரவுள்ள முஸ்லிம் பண்டிகையான ரமலானை முன்னிட்டு புதிய துணி ரகங்களை வாங்க ஜவுளி கடைகளுக்கு வருவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஜவுளி கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் உள்ள பழைய துணி ரகங்களை எடுத்து தூசி தட்ட ஆரம்பித்துள்ளனர். கடையில் உள்ள பணியாளர்களை வைத்து அந்த துணி ரகங்களை ரேக்கில் இருந்து கீழிறக்கி புதிய பாலிதீன் பைகளில் அடைத்தும், பழைய விலைப்பட்டியலை கிழித்து விட்டு புதிய விலைப்பட்டியல் ஒட்டும் பணி படுஜோராக நடந்து வருகிறது. 

இந்த விபரம் தெரியாமல் ஜவுளிகடைக்காரர்கள் சொல்லும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் அந்தந்த கடைகளில் குவிகின்றனர். அவர்கள் சொல்லும் விலையில் இருந்து தள்ளுபடி வேறு வழங்கப்படுவது போல அறிவித்து பொதுமக்களுக்கு திருப்திகரமாக துணிரகங்களை விற்பனை செய்வது போல சொல்லி ஏமாற்றி நூதன முறையில் பழைய துணிகளை விற்று காசாக்கி விடுகின்றனர் ஜவுளி கடைக்காரர்கள்.

இதுதான் வேலூரில் உள்ள ஜவுளி கடைகளில் ஆண்டுதோறும் நடந்து வரும் நூதன கொள்ளை வியாபாரம் ஆகும். துணி மில்களில் இருந்து கொண்டு வரப்படும் துணிகளை விற்பனை செய்துவிட்ட பிறகே அந்த மில்களுக்கு ஜவுளி கடைக்காரர்கள் பணம் செலுத்துகிறார்கள். இது பல நுகர்வோர்களுக்கு தெரியாது. ஏதோ நாம் கேட்ட விலையில் இருந்து விலை குறைத்து கொடுத்து விடுகின்றனர் என்று நம்பி ஜவுளிகடைக்காரர்களிடம் பணத்தை இழக்கின்றனர்.

இந்த வாடிக்கையானது பல ஆண்டுகளாக இருந்து வருவதாக ஜவுளிக்கடைக்காரர் ஒருவர் சொல்லக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்படும் பழைய துணிரகங்கள் ஓரிரு மாதங்களுக்குள்ளாக பல் இளித்து விடுகின்றன. அதாவது நிறம் மங்குவது, மக்கி கிழிந்து விடுவது போன்ற ஏமாற்றங்கள் நுகர்வோருக்கு நடக்கிறது. 

இது தெரியாமல் பல நுகர்வோர் விலை மலிவாக கிடைக்கிறதே என்று விலை ஏற்றி விலை குறைத்து விற்கப்படுவது தெரியாமல் துணிகளை வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர். இது கண்டிக்கத்தக்கது ஆகும். நுகர்வோர்களுக்கு கண்கட்டி வித்தை காண்பித்து ஏமாற்றி விற்பனை செய்து வருகிறார்கள் ஜவுளிக்கடைக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. 

நுகர்வோரை ஏமாற்றி விற்பனை செய்யப்படும் இதுபோன்ற ஜவுளிகடைகளை சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொது மக்களின் எதிபார்ப்பாகும். கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ‘காலச்சக்கரம் வாசகர்கள்’ வேலூர் நுகர்வோர்களுக்கு தெரிவித்து கொள்கிறது. 

Label