OUR CLIENTS
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு! Posted on 11-May-2017 வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

வேலூர், மே 11-
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே துர்கா பவன் ஹோட்டல் எதிரில் தினமும் மிகுந்த போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேற்று நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.

வேலூரில் கிரீன் சர்க்கிள் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இதற்கு காரணம் இந்த இடத்தில் ஜிஆர்டி தங்கும் விடுதி, துர்கா பவன் ஹோட்டல் உள்ளன. காட்பாடி மார்க்கத்தில் இருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சென்னையில் இருந்து வேலூர் வரும் வாகனங்கள் என அனைத்தும் சங்கமமாகும் இடம் கிரீன் சர்க்கிள் பகுதி. இங்கு துர்கா பவன் ஹோட்டல் எதிரில் சென்னை, காட்பாடி மார்க்கமாக வரும் வாகனங்கள் 24 மணி நேரமும் நிறுத்தப்படுகின்றன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் நகர பேருந்துகள் 10 முதல் 20 நிமிடங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல முடியவில்லை. இதை அங்கு பணியாற்றும் போக்குவரத்து  பிரிவு போலீசார் கவனித்து நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்ட படி உள்ளனர். துர்கா பவன் ஹோட்டல் எதிரில் கடந்த 2010ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அறிவுச்செல்வன் பேருந்துகளை நிறுத்த நிரந்தரமாக தடை விதித்திருந்தார்.

இதற்கு பிறகு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கண்டும் காணாமல் அமைதியாக இருந்து விட்டனர். இதன் விளைவு இப்போது எதிரொலிக்கிறது. ஜிஆர்டி கிரான்ட்டுக்காக தனியாக பேரிகார்டுகள் அமைத்து கொடுத்துள்ளனர் போக்குவரத்து பிரிவு போலீசார். என்ன ஒரு கடமை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதை மெச்சாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை. பின்னால் ÔபÕ வைட்டமின் வேலை செய்வது நகர மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

போக்குவரத்து காவலர்கள் செய்ய வேண்டியதை ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்து செய்ய வேண்டியுள்ளது. இதிலிருந்தே இவர்களுடைய நேர்மையை நாம் எடை போட்டு விடலாம். இதைத்தான் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர். மக்கள் வசதியை பாராமல் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஓடி ஓடி பணியாற்றுகின்றனர் போக்குவரத்து பிரிவு போலீசார். இந்த துர்கா பவன் ஹோட்டல் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம் தேவையற்ற ஒன்றாகும்.

புதிய பேருந்து நிலையம் எதிரில் செல்லியம்மன் கோயில் அருகில் ஒரு நிரந்தர பேருந்து நிறுத்தம் உள்ளது. இதை விடுத்து நேஷனல் திரையரங்கம் அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிறுத்தம் தேவையற்றதாகும். இதனால் தொல்லையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த நன்மையும் பயக்கவில்லை. இதை போக்குவரத்து பிரிவு போலீசார் அறிவிப்பு பலகை வைத்து இங்கு வாகனங்கள் நிறுத்த கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதைவிடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதே நகர மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். இந்த இடத்தில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் காதுகளுக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இதையடுத்து அந்த இடத்தில் பேருந்துகளை நிறுத்த தடை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இனி போக்குவரத்து பிரிவு போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவை நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஆய்வு செய்த போது அவருடன் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அறிவழகன் உடனிருந்தார்.

Label