OUR CLIENTS
வேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்!
வேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்! Posted on 10-May-2017 வேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்!

வேலூர், மே 10-
வேலூர் பாகாயத்தில் உள்ள அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம் தொடருகிறது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் குறட்டை விடும் பரிதாப நிலையில்  உள்ளனர். வேலூர் பாகாயத்தில் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது.

இந்த விடுதியில் அடிப்படை வசதிகளே இல்லை. கழிப்பறைகள் அசுத்தமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதை பயன்படுத்தும் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கல்லூரி விடுதி காப்பாளர் சண்முகம் மாணவர்களுக்கு உணவு சமைத்து போடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மாணவர்கள் பணம் கொடுத்து வெளியில் தனியார் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

படிக்கும் மாணவர்கள் மனநலம் பாதிக்கும் நிலையில் உள்ளனர். விடுதி வார்டன் சண்முகம் மாணவர்கள் பெயரைச் சொல்லி பணத்தை வாரி சுருட்டுகிறார். சமையலர்கள் ஏகாம்பரம், சக்கரவர்த்தி, ஆகியோர் பணிக்கு சரிவர வருவதே இல்லை. அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை வீட்டுக்கு எடுத்துச் செல்வதில் இவர்கள் வல்லவர்கள் ஆவர். இந்த விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது. ஆனால்  யாரும் இந்த வளாகத்தை சுத்தப்படுத்த கூட முன்வரவில்லை. மிக மோசமான நிலையில் விடுதி காப்பாளர் பராமரித்து வருகிறார்.

இவர் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. பணத்தில் மட்டும் குறியாக இருக்கிறார். குளியலறையில் கதவுகள் இல்லை. துணி துவைக்க இடவசதி இல்லை. எங்கு சென்றாலும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பன்றிகள் இந்த விடுதிக்குள் ஹாயாக உலா வருகின்றன. விடுதியில் மின்விளக்கு வசதி மிகவும் மோசமாக உள்ளது. இரவில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் மின்னொளி இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் திறந்து கிடக்கின்றன.

இந்த தண்ணீரையே மாணவர்கள் குடிப்பதற்கும் பயன்படுத்த வேண்டி கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசும், ஆதிதிராவிடர் நலத்துறையும் முன்வர வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இந்த விடுதியை ஆய்வு செய்ய கூட வருவதில்லை. இதனால் அவரவர் விருப்பம்போல விடுதியை நடத்துகின்றனர். சுகாதாரச் சீர்கேடுகள் நிறைந்துள்ள இந்த விடுதியை விரைவில் புதுப்பொலிவு பெறச் செய்ய மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட வேண்டும்.

கல்வி கற்கும் மாணவர்களுக்கு வேறெங்கும் இல்லாத வேலைகள் இந்த விடுதியில் உள்ளது ஏற்புடையதாக இல்லை.மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். இதுபோன்ற கொடுமை வேறெந்த விடுதியிலும் நடைபெறாத வகையில் ஆதிதிரராவிடர்ர் நலத்துறை அ¬மைச்சர்  விடுதிகளை ஆய்வு செய்து புதுப்பொலிவு பெறச் செய்ய ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு பல லட்சம் செலவு செய்து விடுதிகளை நடத்தினாலும் இதுபோன்ற ஒரு சில விடுதி காப்பாளர்கள் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகளை  களைய   மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும் முன்வர வேண்டும் என்பதே கல்லூரி விடுதி யில்  பயிலும் மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Label